கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் உற்சாகமாக இருந்த வீடியோ வெளியாகும் என்கிற அச்சம் காரணமாகவே ஐ.பி.எல் வழக்கில் கருணாஸ்க்கு ஜாமீன் வழங்குவதை தமிழக அரசு எதிர்க்கவில்லை என்று பரபரப்பாக பேசப்படுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தின் போது ஜாதிய மோதல்களை தூண்டும் வகையில் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட கருணாஸ் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ஆனால் கருணாஸ்க்கு ஜாமீன் கொடுக்கவே கூடாது என்று தமிழக அரசு மிக கடுமையாக எதிர்த்தது. அதுவும் கருணாஸ் உடன் கொலைகாரர்கள் யாராவது இருக்கிறார்களா என விசாரிக்க வேண்டும் என்பதால் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என்று கூட தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், கருணாஸ் காவல்துறை அதிகாரி அரவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததன் பின்னணி என்ன என்பதையும் அறிய போலீஸ் காவல் வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கூறினார். சுமார் ஒன்றரை மணி நேரம் கருணாசை போலீஸ் காவலில் எடுக்க அரசு வழக்கறிஞர் மிக கடுமையாக வாதிட்டார்.  

ஆனால் நீதிபதி கருணாசை போலீஸ் காவலில் அனுப்ப மறுத்துவிட்டார். இதே போல் கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு ஜாமீன் கொடுக்கவே கூடாது என்றும் தமிழக அரசு ஒற்றைக்காலில் நின்றது. இதனால் மனு தாக்கல் செய்த மூன்று நாட்களுக்கு பிறகே வள்ளுவர் கோட்ட ஆர்பாட்டம் வழக்கில் கருணாஸ்க்கு ஜாமீன் கிடைத்தது.

ஆனால் ஐ.பி.எல் போராட்ட வழக்கில் மனு தாக்கல் செய்த மறுநாளே ஜாமீன் கிடைத்தது. இதற்கு காரணம் இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் மனுவை தமிழக அரசு எதிர்க்கவில்லை. இதற்கு காரணம் கருணாசை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு எடப்பாடி அரசு வந்தது தான் என்கிறார்கள். 

கருணாசை தொடர்ந்து சிறையில் வைத்திருந்தால் எந்த நேரத்திலும் கூவத்தூர் வீடியோ வெளியாகும் என்று வந்த மிரட்டல் தான் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும் முடிவையும் தள்ளிப்போட வைத்துள்ளதாம். இந்த நேரத்தில் கூவத்தூர் வீடியோ ஏதேனும் ரீலிஸ் ஆனால் அரசுக்கு தர்மசங்கடம் என்பதால் தான் கருணாசை சிறையில் இருந்து வெளியேற அரசு அனுமதித்துள்ளதாம்.