தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசருடன் மோதலில் ஈடுபட்ட பிறகு வெளிநாடு டூர் சென்று திரும்பிய நிலையிலும் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் குஷ்பு கவனம் செலுத்தாமல் இருப்பது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பலவிதமான பேச்சுகளை உசுப்பிவிட்டுள்ளது.   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு விரைவில் ராகுல் காந்தி புதிய தலைவரை நியமிக்க உள்ளதாக கடந்த மே மாதம் குஷ்பு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். மேலும் போராட்டம், ஆர்பாட்டம் என்று எதையும் நடத்தாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மந்தமாக இருப்பதாகவும் குஷ்பு கூறியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருநாவுக்கரசர், நடிகை குஷ்பு ஒரு லூசு என்பது போல் பேசியிருந்தார்.இதன் பிறகு குஷ்பு வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் டூர் சென்றுவிட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிகள் எதிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. ஆனால் சுற்றுலாவை முடித்து சென்னை திரும்பி பல நாட்கள் ஆன நிலையிலும் குஷ்புவை சத்தியமூர்த்தி பவன் பக்கமே பார்க்க முடியவில்லை. மேலும் காங்கிரஸ் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவரை பார்க்க முடியவில்லை.  இரண்டு வாரங்களுக்கு முன்னர் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்து கொண்ட நிலையில் அவரது தீவிர ஆதரவாளரான குஷ்பு பங்கேற்கவில்லை. மேலும் செய்தியாளர்களை சந்திப்பதை கூட குஷ்பு தவிர்த்து வருகிறார். இதனால் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறாரா? என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்தேகம் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
 ஆனால் குஷ்பு தேசிய அளவிலான காங்கிரஸ் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ட்விட்டரில் கூட ஆந்திரா, ஹரியானா, மராட்டிய மாநில காங்கிரஸ் பிரச்சனைகள்குறித்து கருத்து கூறுவதும், விவாதம் செய்வதுமாகவும் குஷ்பு பொழுதை கழித்து வருகிறார்.