எப்படியும் தலைமை கொடுத்த வாக்குறுதியின் படி நாம் தான் அந்த தொகுதிகளில் களமிறங்க போகிறோம் என்ற நம்பிக்கையில் ராஜபாளையத்தில் கெளதமியும், சேப்பாக்கத்தில் குஷ்புவும் போட்டி, போட்டு பிரச்சாரத்தை தொடங்கினர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக, பாமக கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. பாஜகவிற்கு 20 தொகுதிகளும், பாமகவிற்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதற்கு முன்னதாகவே குறிப்பிட்ட சில தொகுதிகள் நமக்கு தான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள் சிலர் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தனர்.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 5ம் தேதி ஒப்பந்தமும் கையெழுத்தானது. அப்போதே அதிமுகவிடம் 40 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக நிர்வாகிகள் கொடுத்துவிட்டு வந்தனர். விருதுநகர், ராஜபாளையம், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, சேலம் ஆத்தூர், நாமக்கல், ராசிபுரம், ஈரோடு, பவானி, திருப்பூர், கோவை, கோவை ( தெற்கு), சூலூர், கரூர், அரவங்குறிச்சி, சேப்பாக்கம், மயிலாப்பூர், துறைமுகம், கொளத்தூர், திருத்தணி, செங்கல்பட்டு, ஆலந்துர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்பதூர் (தனி) வேலூர், கேவி குப்பம், கிருஷ்ணகிரி, ஓசூர், தருமபுரி ஆகிய தொகுதிகள் பாஜகவின் விருப்ப பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அத்தோடு மட்டுமில்லாது மறுநாளே பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலும் வெளியானது. அதன்படி, ராசிபுரம் - எல்.முருகன், கிணத்துக்கடவு - அண்ணாமலை, மயிலாப்பூர் - கே.டி.ராகவன், காரைக்குடி - ஹெச்.ராஜா, கோவை தெற்கு - வானதி ஸ்ரீநிவாசன், திருவல்லிக்கேணி - குஷ்பூ, நெல்லை - நயினார் நாகேந்திரன், ராஜபாளையம் -கெளதமி, இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் பி செல்வம் - துறைமுகம் என கேட்ட தொகுதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பாஜக காத்திருந்தது.

எப்படியும் தலைமை கொடுத்த வாக்குறுதியின் படி நாம் தான் அந்த தொகுதிகளில் களமிறங்க போகிறோம் என்ற நம்பிக்கையில் ராஜபாளையத்தில் கெளதமியும், சேப்பாக்கத்தில் குஷ்புவும் போட்டி, போட்டு பிரச்சாரத்தை தொடங்கினர். அதிலும் குஷ்பு இன்று வரை சேப்பாக்கத்தில் வீடு வீடாக சென்று வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். ஆனால் இன்று அதிமுக வெளியிட்ட தொகுதி பட்டியலில் ராஜபாளையம், சேப்பாக்கம், பழனி, மயிலாப்பூர், ராசிபுரம், கிணத்துக்கடவு என பாஜக அதீத நம்பிக்கை வைத்திருந்த தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் வீடு வீடாக போய் வாக்கு சேகரித்த குஷ்புவும், கெளதமியும் உச்சகட்ட அதிருப்தியில் உள்ளார்களாம்.
