மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த, வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்றும், அவரின் இறப்பு குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதற்கு, எம்.எல்.ஏ. குன்னம் ராமசந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், அணிகள் இணைப்புக்கு இது வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறப்புக்குப் பிறகு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகளாக பிரிந்த அதிமுக, இணைப்பு குறித்து பேசி வந்தனர். ஓ.பி.எஸ். அணியினர், சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார். 

இந்த நிலையில், நேற்று கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, அணிகள் விரைவில் இணையும் என்று சூசகமாக தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஓ.பி.எஸ்., தங்களின் கோரிக்கை பாதி தாண்டியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன், முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் செய்தியாளர்களுடன் பேசும்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேட்டியை அடுத்து, எம்எல்ஏ குன்னம் ராமசந்திரன், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி அறிவித்த 2 உத்தரவுகளையும் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் வரவேற்றுள்ளனர் என்றார். 

ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும் என்று, சட்டமன்றத்தில் முதன் முதலாக தான் கோரிக்கை வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். வேதா இல்லம், நினைவில்லமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து தான் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளதாகவும் குன்னம் ராமசந்திரன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைப்பது வரவேற்கத்தக்க விஷயமாக உள்ளது என்றும், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும் எம்.எல்.ஏ. குன்னம் ராமசந்திரன் கூறினார்.