தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளில் மதுவுக்கு பதிலாக பதநீர், பழச்சாறு விற்க வேண்டும் என்று அரசுக்கு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மாதம் 24-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது மே 3 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மது கிடைக்காத சிலர் போதைக்காக ஆல்கஹால் போன்றவற்றைக் குடித்து உயிர்விட்ட சம்பவங்களும் அரங்கேறின. அதே வேளையில் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளை அப்படியே மூடிவிட வேண்டும் என்று பாமக வலியுறுத்திவருகிறது.


இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுவுக்கு பதிலாக பதநீர், பழச்சாறுகள் ஆகியவற்றை விற்க வேண்டும் என்று காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தியிடம் ம.பொ.சிவஞானத்தை ராஜாஜி அறிமுகம் செய்தபோது, 'இவர் கள் இறக்கும் குலத்தைச் சார்ந்தவர்; ஆனால், கள்ளுக்கு உங்களைவிட பரம எதிரி' என்று கூறினார். அதற்கு மகாத்மா காந்தி, 'நான் புளித்த கள்ளுக்குத்தான் எதிரி; இனித்த கள்ளுக்கும் பதநீருக்கும் நண்பன்' என்று தெரிவித்தார்.


தற்போது டாஸ்மாக் கடைகளை மூடியிருப்பதால், 80 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என அரசு அறிவித்துள்ளது. ‘கற்பகத்தரு’ எனப்படும் கேட்டதெல்லாம் கொடுக்கும் பனைமரம் தமிழக அரசின் சின்னமாக உள்ளது. தமிழகத்தில் உடன்குடி, ஸ்ரீவில்லிபுத்தார், கோயமுத்தூர், சென்னை மாதவரம் போன்ற இடங்களில் உள்ள பனை ஏறும் தொழிலாளர்களைக் கொண்டு பனை ஏறவும் பதநீர் இறக்கவும் புதியவர்களுக்கு கற்றுத்தர அரசு முன்வர வேண்டும். பனை ஏறும் இயந்திரத்தையும் அரசு இலவசமாக வழங்க வேண்டும்.


 இரண்டு கோடி பனை மரங்களில் உடனே பதநீரை இறக்கலாம். இந்தப் பதநீரை தமிழகத்தில் மூடப்பட்டிருக்கும் 5,000 டாஸ்மாக் கடைகளில் விற்கலாம். பதநீரோடு சேர்ந்து பழச்சாறும் விற்கலாம். இதனால் குடிப் பிரியர்களின் குடும்ப உறவுகள் நலன் பெறுவார்கள். அரசுக்கும் பண வரவு கிடைக்கும். உடனே தமிழக அரசு இந்த நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்” என்று குமரி அனந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.