கோவை சரளாவை வைத்து எங்களை நேர்காணல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய குமரவேல் தெரிவித்து உள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக உள்ள சி.கே குமரவேல், கடலூர் மாவட்டத்தில் போட்டியிடுவதாக இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை மக்கள் நீதி மையம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின்போது மகேந்திரன், கோவை சரளா உடன் இருந்தனர்.அப்போது கோவை சரளாவிற்கும், சிகே குமரவேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இதில் கடும் கோபமடைந்த குமரவேல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக கட்சியின் தலைமைக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள குமரவேல், நேர்காணலில் நான் கலந்து கொண்டேன், ஆனால், நான் கலந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தவறு. கோவை சரளாவை வைத்து எங்களை நேர்காணல் செய்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை 

யாரும் போட்டியிட முன்வராததால் கடலூரில் போட்டியிட முன்வந்தேன்.கடலூரில் பணியை தொடங்கும்படி மையக்குழுவில் இருந்தவர் சொன்னதால்தான் தொடங்கினேன். கமல்ஹாசனை சூழ்ந்துள்ளவர்கள் அவருக்கு தவறான வழிகாட்டுதலை வழங்குகின்றனர். அதை ஏற்றுக்கொண்டு கமல் செயல்படுகிறார் என குமரவேல் தெரிவித்து உள்ளார்.