குளு குளு குற்றாலம் களையிழந்து போய் காட்சியளிக்கிறது. கொரோனா தொற்றால் இங்குள்ள சுற்றுலா வியாபாரம் இன்றி வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில்  தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதும் ஆனால் குளிக்க ஆட்கள் இல்லை. ஊரடங்கு ஜீலை மாதத்தில் நீக்கப்பட்டால் குற்றாலம் களைகட்டலாம்.

தென்காசி மாவட்டம். குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் கடும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.இது ஒருபுறமிருக்க தென்மேற்குப் பருவமழை துவங்கி 2 மாதங்கள் முழுமையாக நிறைவடைய நிலையில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் அருவிகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. குற்றாலத்திற்கே உரிய அக்மார்க் குளுகுளு சூழல் அங்கு நிலவவில்லை. வாரத்தில் பெரும்பாலான நாட்களில் வெயில் கொளுத்தி வந்தது.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் உட்புறத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.குறிப்பாக பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் சாரல் மழையும் இதமான சூழலுமாக நிலவுவதால் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஐந்தருவி,பழைய குற்றாலம்,புலியருவி, சிற்றருவி மெயின் அருவி பகுதிகளில் 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் வருவதை கண்காணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.