தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எங்கு பார்த்தாலும் மக்கள் காலை முதல் இரவு வரை காலிக்குடங்களுடன் அலைந்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஓட்டல்கள், ஐடி நிறுவனங்கள், தங்கு விடுதி உள்ளிட்டவை தண்ணீர் பற்றாக்குறையால் தற்காலிகமாக முடியுள்ளனர். 

இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னையில் பெருமளவு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளனர். இதில் உண்மையில்லை என்றார். மேலும் பேசிய அவர், தண்ணீர் பிரச்சனையில் எந்த ஓட்டல்களையும் மூடவில்லை என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும், தண்ணீர் பிரச்சனையால் தான் சென்னையில் ஓட்டல்களை மூடப்படுவது எனக்கூறுவது தவறான பரப்புரை எனவும் குறிப்பிட்டிருந்தார். ஐடி நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது வழக்கமானதுதான் என்று கூறினார். 

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது. மேலும், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என அமைச்சர் வேலுமணி பொய் சொல்லி இருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.