முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை ஒட்டி பிரபலங்கள் பலரும் மனம் திறந்து வரும் நிலையில் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவும் தன் பங்குக்கு சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

ஜெயலலிதாவுக்கெனவே பிரத்யேகமாக  உடைகளை வடிவமைப்பது முதல் அவருக்குப் பிடித்த உணவுகளைச் சமைத்துக் கொடுப்பது என, அனைத்தையும் செய்துகொடுத்தவர், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா. ஜெயலலிதாவின் இறுதிக்காரியங்களையும் முன்னின்று செய்தவர். 

ஜெயலலிதாவின் நினைவுகள் குறித்துப்பேசிய அவர், “ சமீப நாட்களாக சிலர் ஜெயலலிதா தனது இறுதிக்காலங்களில் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்க விரும்புவதாக தெரிவிக்கின்றனர். அரசியலிலிருந்து ஜெயலலிதா ஒய்வுபெற விரும்பியதாகச் சொல்லப்படும் சில கருத்துகள் உண்மையானவை அல்ல. . பெண் என்பதாலும், அரசியல் காழ்ப்பு உணர்ச்சியாலும் அவர் அவமானப்படுத்தப்பட்டபோது, சில சமயங்களில் அவ்வாறு அவர் நினைத்திருக்கலாம்.

ஆனால், அதீத மனவலிமையால் அந்த எண்ணங்களிலிருந்து மீண்டுவந்து மக்கள் பணி செய்தார். எனக்குத் தெரிந்தவரை அம்மாவின் சொத்துக்குச் சட்டப்பூர்வமான வாரிசு என்று யாரையும் அவர், வைத்துவிட்டுச் செல்லவில்லை. அவருடைய சொத்து தமிழ்நாட்டு நலனுக்குப் பயன்படுத்தப்பட்டால், மிகவும் மகிழ்ச்சி. சசிகலாவை ஒரு வழக்கில் நேரடியாக ஆஜராகச் சொல்லியுள்ளனர். அதற்காக பரோலில் வரவுள்ளார். 

‘சசிகலாவை தினகரன் மட்டுமே அடிக்கடி சந்திக்கிறார்’ என்கிற செய்தி வருகிறது. உண்மையில் தினகரனால், அவருக்கே உண்மையானவராக இருக்க முடியாதபோது, இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை எப்படி இருக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஜெயலலிதாவிடம் இருந்த கணக்கில் வராத  பணம், சசிகலா உறவினர்களாகிய எங்களிடம் இருப்பதாகச் சொல்லப்படுவதே ஒரு கட்டுக்கதைதான். 

அதே போல் அம்மாவின் அரசியல் வாரிசு யார் என்பதற்குப் போட்டி நடப்பதாகச் சொல்லப்படுவது உண்மையல்ல. எம்.ஜி.ஆர் எப்படி தன்னுடைய அரசியல் வாரிசு என்று யாரையுமே சுட்டிக்காட்டவில்லையோ, அதே போல்தான் ஜெயலலிதாவும் தன்னுடைய வாரிசு இன்னார்தான் என்று சுட்டிக் காட்டவில்லை. அப்படிப்பட்ட ஒரு வாரிசு காலப்போக்கில் தன்னாலேயே உருவாவார். அவர் யார் என்று இப்போது சொல்லமுடியாது’ என்கிறார் கிருஷ்ணப்ரியா.