உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, சனிக்கிழமை அதிகாலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியுவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 29-ம் தேதி மாலை, அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவுவதாக வெளியான தகவலால், மருத்துவமனை முன்பு குவிந்தனர் தொண்டர்கள். அன்று இரவு 10 மணியளவில், மருத்துவமனை வெளியிட்ட  அறிக்கையில் , உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது பிறகு இயல்பு நிலை திரும்பியது. அவர் மீண்டு வந்தது உண்மையிலேயே அதிசயம்தான்' என நெகிழ்ந்தனர் மருத்துவர்கள்.

இதற்கு முன்னதாக கருணாநிதியின் உடல்நிலைகுறித்து மாறுபாடான தகவல்கள் வெளியானதால், 'அரசு நிகழ்ச்சிகளை திடீரென ரத்துசெய்துவிட்டு சென்னை  திரும்பிய எடப்பாடி பழனிசாமி. மறுநாள் காலையில், காவேரி மருத்துவமனையில் கருணாநிதியைச் சந்தித்தார்.  அதன்பிறகு, ஸ்டாலினிடமும் கனிமொழியிடமும் அவரது உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார். முதல்வரோடு  துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், காமராஜ், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். இந்தப் புகைப்படங்கள் வெளியானதும், முதலவரே எதிர் கட்சியின் மூத்த தலைவரை பாக்க சென்றது, 'வட இந்தியாவில் நிலவக்கூடிய அரசியல் நாகரிகம், தமிழகத்திலும் துளிர்விட்டுள்ளது' என மக்கள் மத்தியில் பரவியது. 

இந்நிலையில், திமுக தலைவரை பார்க்கச் சென்றதால் அதிமுக தலைவர்களில் ஒருவரான கே.பி. முனுசாமி கடுமையான கோபத்தை வெளிகாட்டினாராம். 

உடல் நலம் விசாரிப்பதற்காக, கோபாலபுரம் வீட்டிற்க்கே சென்று கலைஞரை ஓபிஎஸ், ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பார்த்து வந்தார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி போய்ப் பார்த்தார். துணை முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்களும் போனார்கள். அதன் பிறகு சபாநாயகர் தனபால் போனார். அமைச்சர் செல்லூர் ராஜு போனார். பிறகு ஓ.எஸ்.மணியன் போனார். இப்படியாக தினமும் திமுகவினருக்கு இணையாக அதிமுக அமைச்சர்களும் காவேரி மருத்துவமனைக்கு வருவதும் போவதுமாகவே இருக்கிறார்கள்.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சரான கேபி முனுசாமி, துணை முதல்வர் ஓபிஎஸிடம்  பேசியிருக்கிறார். ‘நீங்க போனீங்க... எடப்பாடி போனாரு. விசாரிச்சுட்டு வந்தாச்சு. அதோடு நிறுத்திக்க வேண்டியதுதானே... எதுக்கு தினமும் ஒவ்வொரு அமைச்சராக ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்காங்க? அப்படி அவரை  போய் பார்க்க வேண்டிய கட்டாயம் என்ன? வெளியில இருந்து பார்க்கிறவங்க இவங்க எதுக்கு தினமும் போய்ட்டு இருக்காங்கன்னு பேசுறாங்க. ஏன் நம்ம கட்சிக்காரங்களே முகம் சுளிக்கிறாங்க...’  என குமுறி இருக்கிறார் .