மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு வகித்த வேளாண் துறையை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார். இந்நிலையில் துரைக்கண்ணு வன்னியர் என்பதால் அவரது பதவியை அதே சமுகத்தைச் சேர்ந்த தனக்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகமும், பகுதி ரீதியாக டெல்டா பகுதியைச் சேர்ந்த தனது ஆதரவாளருக்கு அளிக்க வேண்டும் என வைத்திலிங்கமும் முதல்வரை வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் துரைக்கண்ணு பதவி வகித்து வந்த வேளாண்துறையை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி, தமிழக ஆளுநருக்கு பரிந்துரைத்தார். அதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஏற்றார். இதையடுத்து கே.பி.அன்பழகனுக்கு உயர் கல்விதுறையுடன், வேளாண் துறை கூடுலாக அளிக்கப்பட்டுள்ளது. இனி அவர் உயர்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் என அழைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்ட போது அவரிடம் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறை இலாகா அவரது சமுகத்தைச் சேர்ந்த ஆர்.பி.உதயகுமாரிடம் வழங்கப்பட்டது. அதேபோல சி.வி.சண்முகம் கேட்ட நிலையில், அதே சமூகத்தைச் சேர்ந்த கே.பி.அன்பழகனிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். இதனால் சி.வி.சண்முகம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.