Asianet News TamilAsianet News Tamil

இன்னொரு கோயம்பேடாக மாறிவிடக்கூடாது... அரசை எச்சரிக்கும் டாக்டர் ராமதாஸ்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் இன்று சந்தித்து வரும் அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியது தான். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட 11,760 தொற்றுகளில் மூவாயிரத்துக்கும் கூடுதலான தொற்றுகள் கோயம்பேட்டிலிருந்து பரவியவை தான்.

koyambedu market coronavirus spread issue...ramadoss Warning
Author
Tamil Nadu, First Published May 19, 2020, 2:06 PM IST

திருமழிசை சந்தை செயல்படத் தொடங்கி இன்றுடன் 10 நாட்கள் ஆகும் நிலையில், கோயம்பேடு சந்தை மூலம் ஏற்பட்ட நோய்ப்பரவல் திருமழிசை சந்தை மூலமாகவும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை அரசு எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக, நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் அத்தனை வாய்ப்புகளையும் கண்டறிந்து முறியடிக்க வேண்டும். சென்னையில் அதிக அளவில் வணிகர்கள் கூடும் இடமாக திருமழிசை சந்தை திகழ்ந்து வரும் நிலையில், அது நோய்த்தொற்று மையமாக மாறிவிடாமல் தடுக்க வேண்டும்.

koyambedu market coronavirus spread issue...ramadoss Warning

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் மூலமாக ஒரு மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவும் என்பது தான் இயல்பானதும், வழக்கமானதும் ஆகும். இந்த இலக்கணத்தின்படி மட்டும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவியிருந்தால், எப்போதோ அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், எவருமே எதிர்பாராத வகையில், டெல்லி மாநாட்டின் மூலமாகவும், சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் கொரோனா பரவியது தான் தமிழகத்தின் நிலைமையை மோசமாக்கியுள்ளது. மேற்கண்ட இரு நிகழ்வுகளில் இருந்தும் பாடம் கற்றுக் கொண்டு, அதேபோன்ற நிகழ்வு மீண்டும் ஒருமுறை நடக்காமல் தடுக்க வேண்டியது கொரோனா நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அரிச்சுவடி ஆகும்.

டெல்லி மாநாட்டின் மூலம் பரவிய நோய்த்தொற்றுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டு, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்ட நிலையில், கோயம்பேடு சந்தை மூலம் ஏற்பட்ட தொற்றுகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவது தான் அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் கடுமையாக போராடினாலும், எதிர்பார்த்த வெற்றியை இன்னும் பெற முடியவில்லை; மக்களிடம் அச்சம் தீரவில்லை.

koyambedu market coronavirus spread issue...ramadoss Warning

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் இன்று சந்தித்து வரும் அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தத் தவறியது தான். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட 11,760 தொற்றுகளில் மூவாயிரத்துக்கும் கூடுதலான தொற்றுகள் கோயம்பேட்டிலிருந்து பரவியவை தான். நோய்ப்பரவல் தொடரக்கூடாது என்பதற்காகத் தான் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, சென்னை புறநகர் பகுதியில் திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

திருமழிசை சந்தை செயல்படத் தொடங்கி இன்றுடன் 10 நாட்கள் ஆகும் நிலையில், கோயம்பேடு சந்தை மூலம் ஏற்பட்ட நோய்ப்பரவல் திருமழிசை சந்தை மூலமாகவும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை அரசு எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும். கோயம்பேடு சந்தையில் காய்கறி மொத்த விற்பனை கடைகள் மட்டும் 1800-க்கும் கூடுதலாக இருந்தன. திருமழிசை சந்தையில் ஒட்டுமொத்த கடைகளின் எண்ணிக்கையே 200 மட்டும் தான். ஆனாலும் கூட கோயம்பேடு சந்தைக்கு வந்த காய்கறிகளில் மூன்றில் இரு பங்கு அளவுக்கு திருமழிசைக்கும் வருகின்றன. கேயம்பேடு சந்தையுடன் ஒப்பிடும் போது திருமழிசை சந்தைக்கு நான்கில் மூன்று பங்கு மொத்த வணிகர்கள் வந்து செல்கின்றனர். திருமழிசை சந்தை ஒரு நாளைக்கு சில மணி நேரங்கள் மட்டும் தான் செயல்படுகிறது என்றாலும் கூட, அங்கு பெரும் கூட்டம் கூடுகிறது.

koyambedu market coronavirus spread issue...ramadoss Warning

கோயம்பேடு சந்தைக்கு வந்த அதே ஊர்களில் இருந்து தான் காய்கறிகள் வருகின்றன. அதே வணிகர்கள் தான் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் திருமழிசை சந்தையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடுகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்; முகக்கவசமும், கையுறைகளும் அணிய வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், திருமழிசை சந்தையில் ஆரம்பத்தில் சில நாட்களைத் தவிர, அடுத்து வந்த நாட்களில் அவையெல்லாம் கடைபிடிக்கப்படவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் வரும் சரக்குந்துகள் மற்றும் அதன் ஓட்டுனர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் வரும் வணிகர்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் சங்கமமாகும் திருமழிசை சந்தையில் ஏதேனும் ஒருவருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்படாமல் இருந்தால் கூட, அது மளமளவென மற்றவர்களுக்குத் தொற்றி, அடுத்த சில நாட்களில் புதிய நோய்த்தொற்று மையத்தை உருவாக்கி விடக்கூடும்.

koyambedu market coronavirus spread issue...ramadoss Warning

ஏற்கனவே, திருமழிசை சந்தை அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் 566 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 537, காஞ்சிபுரத்தில் 203, சென்னையில் 7117 பேர் என சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 8423 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழகத்தின் மொத்த எண்ணிக்கையில் 72% ஆகும். இத்தகைய சூழலில் திருமழிசை சந்தையும் கோயம்பேடாக மாறினால், அதன் விளைவுகளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளால் தாங்க முடியாது. எனவே, நோய்த்தடுப்பு மிகவும் முக்கியமாகும்.

திருமழிசை சந்தை நோய்த்தொற்று மையமாக மாறுவதைத் தடுக்க அங்குள்ள வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, அங்குள்ளவர்கள் கையுறை அணிவது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை உறுதி செய்வது, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை கைகளையும், முகங்களையும் கழுவுவது உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடைமுறைகளை அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். திருமழிசை சந்தையை முழுமையான சுகாதார கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, அங்கிருந்து கொரோனா பரவுவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக திருமழிசை சந்தையில் சிறப்பு காவல் அதிகாரிகளையும், சுகாதார அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios