முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய செந்தில் பாலாஜி.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.. வேலுமணிக்கு 'அதிர்ச்சி' கொடுத்த கோவை
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு பேரூராட்சியை திமுக ஒட்டுமொத்தமாக கைப்பற்றியுள்ளது.
பிப்ரவரி 19ம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும், கோவையை பொறுத்தவரை அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.
இதனை கருத்தில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களையும் கைப்பற்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டத்தையும் திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமித்தது திமுக தலைமை. இதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தின் பட்டி தொட்டியெங்கும் சுற்றுபயணத்தை ஆரம்பித்த அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளர் முதல் அடிமட்ட உறுப்பினர் வரை அனைவரும் கௌரவப்படுத்தி கட்சி தொண்டர்களுக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளார்.
பொதுமக்களிடையே நல்ல கவனத்தை பெற்றாலும், திமுகவினரின் கவனத்தை பெறவில்லை என்கிறார்கள் கோவை மாவட்ட உடன்பிறப்புகள். யார் யார் கட்சிக்கு உழைத்தார்களோ அவர்களுக்கு போட்டியிட ‘சீட்’ கொடுக்காமல், வாரிசுகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் கொடுத்து அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார்கள் செந்தில் பாலாஜி & கோவினர்.
அதிருப்தியால் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் திமுகவினர். அதுமட்டுமின்றி மேலிடத்துக்கு பெரிய புகார் பட்டியலையும் வாசித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவினருக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.
பொள்ளாச்சியை அடுத்த பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், வார்டு எண் 3, 6, 7, 8, 9, 11, 12, 14,15 ஆகிய 9 வார்டுகளில் 8 திமுக வேட்பாளர்கள் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளரை எதிர்த்து தாக்கல் செய்திருந்த அனைத்து வேட்பாளர்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
திமுக வேட்பாளர்கள் வெற்றி இதன் காரணமாக 3வது வார்டில் எம்.பிரியா, 6வது வார்டில் ஜெ.பரமேஸ்வரி, 7வது வார்டில் என்.தேவிகா, 8வது வார்டில் கே.நந்தவேல்முருகன், 11வது வார்டில் ஆர்.கஸ்தூரி, 12வது வார்டில் டி.கலைமணி, 14வது வார்டில் ப.நாகராஜ் 15வது வார்டில் ஆர்.சபரீஸ்வரன் என 8 திமுக வேட்பாளர்களும், 9வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ஆர்.ரவி என்பவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனால் மொத்தமுள்ள 15 வார்டுகளில் பெருபான்மை வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதால் நெகமம் பேரூராட்சியை திமுக கைப்பற்றி இருக்கிறது. கோவை மாவட்டமே அதிமுக கையில் இருக்கிறது என்று சொன்ன அதிமுகவினரிடையே இந்த செய்தி ‘அதிர்ச்சியை’ கொடுத்து இருக்கிறது.