எடப்பாடியோடு தன்னை ரஜினி ஒப்பிட்டுப் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு என கொங்குநாடு தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:-  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கனவிலும் முதலமைச்சராக நினைக்கவில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார்.  எதிர்ப்பார்க்காமல் நடப்பதுதான் அதிசயம்,  ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தான் முதல்வராக வருவேன் என்ற எதிர்பார்ப்போடு நடக்கும் என்று நினைப்பது அதிசயம் ஆகாது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திடீரென்று எங்கோ இருந்து அழைத்துவரப்பட்டு முதலமைச்சராக்கப்பட்டவர் அல்ல.  அதிமுகவின் கிளைச் செயலாளராக,  ஒன்றிய செயலாளராக,  மாவட்ட செயலாளராக ,  சட்டமன்ற உறுப்பினராக,  பாராளுமன்ற உறுப்பினராக,  அமைச்சராக இருந்து ஜெயலலிதாவுக்கு பிறகு அங்கு வெற்றிடம் ஏற்பட்டபோது,  முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  அவரோடு ரஜினி தான் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது.  சில அறிவு ஜீவிகள் எம்ஜிஆர் ஓடு ரஜினியை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்,  எம்ஜிஆர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக்கு காரணமாக இருந்தவர் .  அந்தக் கட்சியின் பொருளாளராக இருந்தவர். 

நடிப்பு ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு எம்ஜிஆர் முதலமைச்சரான வரவில்லை, அவருடன்  இப்படி எல்லாம் ஒப்பிட்டுக் கொண்டு ரஜினி தான் முதல்வர் ஆவேன் என்று நினைத்தால் தனக்குத்தானே சூடு போட்டுக் கொள்வார்.  2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு,  அன்றைய  பிரதமர்  வேட்பாளர் மோடி அவர்கள் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு ரஜினி ரசிகர்கள் ஆங்காங்கே மோடிக்கு ஆதரவாக பணியாற்ற வந்தார்கள்.  எந்த அளவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு இருந்தது என்பது அன்றைய தேர்தலில் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும் .  ரஜினியை சுற்றி இருக்கின்ற பத்து பேர் தங்கள் சுய லாபத்திற்காக. தமிழகமே ரஜினி பின்னால் நிற்பது போல ரஜினியை நம்ப வைக்கிறார்கள்.

அதனுடைய வெளிப்பாடுதான் ரஜினியின் இந்த பேச்சு, அவருடைய இலக்கு எம்ஜிஆருடைய ஓட்டுக்களை பிரிப்பது .  இரட்டை இலைக்கு விழுகின்ற வாக்குகளை ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை அவர் பிரிக்கலாம்.  தமிழக மக்கள் விழிப்புணர்வோடு ஜாக்கிரதையாக இருக்க  வேண்டிய நேரம் இது.  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.