சசிகலா உறவினர்கள் கட்சியிலும், ஆட்சியிலும் இருக்கும் வரை, நிம்மதியாக வாழ விட மாட்டோம் என்று, பாஜக தரப்பில் இருந்து செய்திகள் கசியவிடப்பட்டு, சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதை தெளிவாகப் புரிந்து கொண்ட கொங்கு மண்டல அமைச்சர்கள், தினகரனிடம் , துணை பொது செயலாளர் பதவியில் இருந்து விலகுமாறு நேரடியாகவே கூறி விட்டனர்.

அதனால் கோபப்பட்ட தினகரன், எனக்கு எல்லாம் தெரியும் நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என பேச, தம்பிதுரை தலையிட்டு ஒரு வழியாக அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதன் பிறகு, எடப்பாடி வழிகாட்டுதலின்படி, கொங்கு மண்டல அமைச்சர்கள், தங்கள் பகுதி எம்.எல்.ஏ க்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

என்ன சொன்னாலும், எப்படி சொன்னாலும் தினகரன் விலகுவது போல் தெரியவில்லை. அதனால், இரண்டு அமைச்சர்களும், 10 எம்.எல்.ஏ க்களும் முதலில், ஓ.பி.எஸ் அணியில் இணைவோம்.

அதன் பின்னர் பன்னீர் அணியை இங்கு கொண்டு வந்து சேர்ப்போம். அல்லது, தினகரனை தவிர்த்து விட்டு, எடப்பாடியோடு அனைவரும் இணைந்து ஒரு பிரம்மாண்ட விழா நடத்துவோம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு, அதில் கலந்து கொண்ட யாரிடம் இருந்தும் எந்த எதிர்ப்பும் வரவில்லை. மாறாக நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம் என்று கூறியுள்ளனர்.

அதையடுத்து, பன்னீர் அண்ணன் மட்டும் இருந்திருந்தால், வருமான வரி சோதனை, கட்சி பெயர் முடக்கம், சின்னம் முடக்கம் என எந்த பிரச்சினையும் வந்திருக்காது என்று, அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர்.

அதன் பிறகு கொங்கு மண்டலத்தில்  உள்ள முக்கிய அமைச்சர் ஒருவர், பன்னீர் தரப்பிடம் பேச, பன்னீர் தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால், அதிமுகவில் மூன்று மாதமாக நிலவிய பிளவு முடிவுக்கு வருகிறது. கட்சி மற்றும் ஆட்சியில்  தினகரன் உள்ளிட்ட சசிகலா உறவினர்களின் ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி என்று  மிக உற்சாகமாக கூறுகிறது கொங்கு மண்டலம்.