மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு என கொங்கு நாடு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு எம்எல்ஏ அறிவித்துள்ளார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தனியரசு. மற்ற சுயேட்சை எம்எல்ஏக்களான நடிகர் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோருடன் இணைந்து ஒன்றாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததற்கு மூவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

தமிமுன் அன்சாரி பகிரங்கமாக அதிமுக கூட்டணிக்கு ஆதரவில்லை என்று தெரிவித்து விட்டார். முதலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கொங்கு நாடு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, தற்போது பாஜக தவிர்த்து அதிமுக மற்றும் கூட்டணியில் உள்ள மற்ற வேட்பாளர்களுக்கு ஆதரவு என அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆதரவளிப்போம். பாஜகவிற்காக பிரச்சாரம் செய்வதில் உடன்பாடு இல்லை. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை 9 ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் உள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததைத் தவிர அதிமுகவுடன் மாற்றுக் கருத்து இல்லை. இன்று சென்னை வண்டலூரில் பிரதமர் மோடி பங்கேற்கும் அதிமுக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கப் போகிறேன்’’  என அவர் தெரிவித்துள்ளார்.