மற்ற மாவட்டங்களை எல்லாம் நிர்வாக வசதிக்காக இரண்டாக, மூன்றாக பிரித்து அறிவிப்பை வெளியிடும் நீங்க  கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாக பிரித்து அறிவிக்க தயங்குவது ஏன்? என கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள இதனை அணைத்தது கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளார்.

இது சம்பந்தமாக கொங்கு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "இன்றைய தினம் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து மேலும் இரண்டு புதிய மாவட்டங்களை தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனால் பல ஆண்டுகளாக கோபி மற்றும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்ற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது தொடர்ந்து கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுகிறது என்ற உணர்வு கொங்கு மண்டல மக்களிடையே உருவாகியிருக்கிறது. 

கொங்கு மண்டலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி மற்றும் கோபியை தனிமாவட்டமாக அறிவிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது. கோபியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் கோபியை தனிமாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்காமல் பள்ளிகளில் மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது, பொட்டு வைக்க கூடாது என்று நடவடிக்கை மேற்கொண்டு வருவதை மக்கள் வேடிக்கையாக பார்க்கிறார்கள். 

கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஏதாவது அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் கொங்கு மண்டல மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சிகிறது. மற்ற மாவட்டங்களை எல்லாம் நிர்வாக வசதிக்காக இரண்டாக, மூன்றாக பிரித்து அறிவிப்பை வெளியிடும் தமிழக முதலமைச்சர் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாக பிரித்து அறிவிக்க தயங்குவது ஏன்? 

எனவே தமிழக அரசினுடைய செயல்பாட்டையும், தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிப்பையும் கொங்கு மண்டல மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு தமிழகத்திலிருக்கும் கொங்கு மண்டல மக்களின் உணர்வுகளுக்கும், கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.