மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு எடுத்த முடிவு சொந்த காசுலேயே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம் என்று கொ.ம.தே.க. கட்சித் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு தமிழக மக்களே எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளை இந்த முடிவு ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கினால் வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்களிடத்தில் வருமானத்துக்கான வழி கிடையாது. தேவையான வருமானத்தை ஈட்டுவதற்கு இன்னும் 6 மாத காலமாகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மதுபானக்கடைகள் திறந்தால் ஏழை குடும்பங்களில் சிறிதளவு மீதி இருக்கிற பணமும் டாஸ்மாக் கடைகளில் செலவழிக்கப்படும். இதனால் பல குடும்பங்களில் அடிப்படை தேவைகளுக்குகூட பணம் இல்லாமல் போகும். கொரோனா பாதிப்பினுடைய வீரியம் குறையாத இந்த சூழ்நிலையில் அதிகபட்சம் மக்கள் இன்னும் வீடுகளில் முடங்கிக் கிடப்பதால் குடும்ப சண்டை சச்சரவுகள் அதிகமாகும். குற்றங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் இது ஏற்படுத்தும்.


வருமானத்திற்கு வழிகளே இல்லாத போது செலவுக்கான வழிமுறைகளை அரசு காட்டியிருப்பது ஏற்புடையதல்ல. போதை ஏறிய பின்னால் சமூக விலகலை கடைபிடிப்பது, அடிக்கடி கை கழுவுவது போன்ற கொரோனா எதிர்ப்பு பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது கடினம். இதன் மூலம் மேலும் கொரோனா தொற்று பரவல் அதிகமாகும். டாஸ்மாக் மது வகைகளை குடிப்பவர்களுக்கு உடம்பில் எதிர்ப்பு சக்தியும் குறையும். நோய் பரவலை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற சூழ்நிலையில் மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற நோக்கத்தோடு தமிழக அரசு வருமானத்திற்கு வழி தேடியிருப்பது வருத்தமளிக்கிறது.
மதுபானங்கள் வாங்குவதற்காக மக்கள் பக்கத்து மாநிலங்களுக்கு செல்வதை காரணம் காட்டி அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவெடுத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு எடுத்த முடிவு சொந்த காசுலேயே சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம். மே 7-ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற உத்தரவை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.” என்று அறிக்கையில் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.