குடியுரிமை திருத்த சட்டத்திற்கு திமுக , காங்கிரஸ்  உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக தரப்பில் கடந்த  வாரம்  சென்னையில்  போலீஸ் அனுமதி பெறாமல் பேரணி நடத்தினர்.

இந்நிலையில் சென்னை பெசன்ட்நகரில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  வழக்கறிஞர் காயத்ரி உட்பட சில பெண்கள் கோலமிட்டனர். இதனையடுத்து 6 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று பல்லாயிரக்கணக்கானோர் கோலமிட்டனர். இதே போல் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கோலங்கள் போடப்பட்டன.

இதனிடையே  சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு, சி.ஐ.டி., காலனியில் உள்ள கனிமொழி வீட்டில்கோலம் போடப்பட்டுள்ளது. வேண்டாம் CAA, NRC என்றும், அருகில் சில பூக்களும் கோலத்தில் இடம் பெற்றிருந்தது.

பெசன்ட்நகரில் கோலம் போட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதால் ஸ்டாலின், கனிமொழி கைது செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல், கோவை, திருப்பூர், மதுரை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திமுக.,வினர் கோலம் போட்டனர். அவர்கள் எல்லாம் அரெஸ்ட் ஆவார்களா? என்றும் கேள்வி எழுந்துள்ளது