கொடநாடு கொள்ளை சம்பவம் குறித்த விவகாரத்தில் எனக்கு தொடர்பில்லை, வீடியோ தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். 
 
இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் கொடநாடு விவகாரம் குறித்து தெஹல்கா ஆசிரியர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். கொட நாட்டில் 2017 ஏப்ரல் 24-ம் தேதி நடந்த சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளார். இது உண்மைக்கு புறம்பானது. 

இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீதும், பின்புலத்தில் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக நேற்றைய தினமே சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். வீடியோ வெளியீட்டில் அரசியல் பின்புலம் உள்ளது.

 

கொடநாடு எஸ்டேட்டில் அன்றைய தினம் நடந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்தக் குற்றவாளிகள் இதுவரை 22 முறை நீதிமன்றத்திற்கு சென்று வந்துள்ளனர். நீதிமன்றத்தில் எதுவும் சொல்லாத அவர்கள், தற்போது புதிதாக ஒரு செய்தியை சொல்லி வழக்கை திசை திருப்பப் பார்க்கின்றனர். வருகிற பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அவர்களுக்கு பின்னால் யார்? யார்? உள்ளனர் என்பது, விரைவில் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஆவேசமாக கூறியுள்ளார். 

அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் குறுக்கு வழியை கையாள்கிறார்கள். அவர்களால் அதிமுக அரசை கவிழ்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.