கொட நாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்காக அரங்கேற்றப்பட்டது தான் என்று இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சயன் கூறியதை தொடர்ந்து தமிழக அரசியல் சூடு பிடித்தது. ஆனால் இந்த விவகாரத்தில் தி.மு.கதிடீரென பின்வாங்கிய நிலையில் அந்த சூடு மெல்ல தணிந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் நெருங்கும் சமயத்தில் மேலும் பல திகில் படங்கள் வெளியாகும் என்றார்.

அதாவது தேர்தல் நெருங்க உள்ளதால் தி.மு.க மற்றும் தினகரன் தரப்பினர் அடுத்தடுத்து பல திகில் படங்களை வெளியிடுவார்கள் என்று ஜெயக்குமார் கூறினார். கோட நாடு ஆவணப்படத்தினால் எழுந்த பிரச்சனையை சமாளிக்கவே அ.தி.மு.கவிற்கு நாக்கு தள்ளிவிட்டது. ஆனால் இனிமேல் தான் திகில் படங்கள் வெளியாகும் என்று அமைச்சரே கூறியிருப்பது தான் தற்போது ஹாட் டாபிக்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் ஜெயலலிதா தொடர்புடைய சில வீடியோக்களை வெளியிட தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக வீட்டிலேயே நோயின் தீவிரம் அதிகமாகியிருந்த சமயத்தில் அவர் பேசியதை அவருக்கே தெரியாமல் சசிகலா வீடியோ எடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை கடந்த 2017ம் ஆண்டு தான் சிறைக்கு செல்வதற்கு முன்னதாக முன்னணி புலனாய்வு வார இதழ் ஒன்றின் மூத்த செய்தியாளரிடம் சசிகலா போட்டுக் காட்டியதாகவும் ஒரு பேச்சு உண்டு. அதாவது அந்த வீடியோவில் ஜெயலலிதா மூச்சுக்கு 300 முறை சசி சசி என்று கூறிக் கொண்டே இருப்பது போன்றும், எல்லாவற்றுக்கும் சசிகலாவை ஜெயலலிதா அழைப்பது போன்றும் காட்சிகள் இருப்பதாக அந்த செய்தியாளர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அப்போதே கூறியிருந்தார். அந்த வீடியோவை தான் தேர்தல் சமயத்தில் தினகரன் வெளியிடக்கூடும் என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு வீடியோ இருப்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சசிகலாவின் சகோதரர் திவாரகனும் உறுதிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தான் ஜெயக்குமார் திகில் படங்கள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். எனவே அனைத்தையும் கூட்டிக் கழித்து பார்த்தால் தமிக ஊடகங்களுக்கு அடுத்து வரு சில மாதங்களுக்கு செம தீனி இருப்பது மட்டும் தெரிகிறது.