கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய மனோஜ் மற்றும் சயானை பிப்ரவரி 25-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என அதிரடியாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து டெல்லி சென்ற மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இருவரையும் கைது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அரசு தரப்பில் சிறையில் அடைக்க வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால் அவர்களை சிறையில் அடைக்க மறுத்த நீதிபதி ரூ.10 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்துடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது. 

இதையடுத்து சயான் மற்றும் மனோஜின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உதகை நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனால் இருவரும் நேரில் ஆஜராக உதகை நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இருவரும் நேரில் ஆஜராகாததால் ஜாமீனை ரத்து செய்த நீதிமன்றம், இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தது. 

இந்நிலையில், உதகை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் மற்றும் சயான் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட மனோஜ், சயான் ஆகியோரை பிப்ரவரி 25-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.