ஜெயலலிதா தனது இரண்டாவது தாய்வீடாக நினைத்தது கோடநாடு எஸ்டேட்டை தான். அவரைப் பொறுத்தவரையில் மிக சென்டிமெண்டான வீடு, அங்கிருக்கும் பங்களா. 2006-ல் ஆட்சியை இழந்து, அரசியலில் சரிவை சந்தித்த ஜெயலலிதால், 2011ல் மீண்டும் விஸ்வரூபமெடுக்க அடித்தளமிட்டது இந்த வீடுதான். கிட்டத்தட்ட மினி தலைமை செயலகம் போலவே சகல அதிகார வசதிகளுடன் அமைக்கப்பட்ட தனிச்சிறப்பான பங்களா இது. 

அக்கம் பக்கம் எந்த மலைமீது ஏறி நின்றும் போட்டோ, வீடியோ எடுத்துவிட முடியாதபடி மிக பக்காவாக திட்டமிடப்பட்டு கட்டப்பட்ட பங்களா இது. போயஸ் கார்டனை விட அதீத பாதுகாப்புடன், ஏரி, பிரத்யேக போட்டிங் சர்வீஸ், பேட்டரி கார், பல நூறு ஏக்கர்  டீ எஸ்டேட், அருகிலேயே ஹெலிபேட் என்று இந்த கொடநாடு எஸ்டேட் மற்றும் கொடநாடு பங்களாவின் ஸ்பெஷாலிட்டிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். 

சொத்துக் குவிப்பு வழக்கின்படி கோர்ட்டில் அட்டாச் செய்யப்பட்டிருக்கும் இந்த பங்களா பற்றி ஜெ.,வின் மருமகன் தீபக் கொளுத்திப் போட்டிருக்கும் தகவல் தலைசுற்ற வைக்கிறது. அதாவது வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை குவித்த வழக்கில், குன்ஹா தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்ற பெஞ்ச். ஜெ., இறந்துவிட்டதால் மற்ற மூவரும் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஜெயலலிதா, முதலமைச்சர் அதிகாரத்துக்கு வந்த பின் வாங்கப்பட்ட சொத்துக்களை இந்த வழக்கின் கீழ் அரசுடமையாக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில் கொடநாடு எஸ்டேட், பங்களா ஆகியனவும் வருவதாக கோர்ட் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களாவை அதன் மேனேஜர் நடராஜன் என்பவர் கவனித்து வருகிறார். மன்னார்குடி பகுதியை சேர்ந்த இவர் சசியின் வெகு தீவிர விசுவாசி. வெறும் மேனேஜராக வந்து சேர்ந்த இவர் ஒரு கட்டத்தில் தேர்தலில் லாபி செய்யுமளவுக்கு வளர்ந்தார். 

நாடாளுமன்ற தேர்தல் துவங்கி உள்ளாட்சி தேர்தல் வரையில் ‘எஸ்டேட் மேனேஜர் கோட்டா’ என்று தனியாக ஒதுக்கப்படுமளவுக்கு அதிகாரமிக்க மனிதரானார். இந்நிலையில் ஜெயலலிதா மரணமடைந்து, சசிகலா சிறை சென்ற பின் கடந்த ஆண்டு அவர்களின் சொத்துக்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தபோது இந்த கொடநாடு பங்களா, எஸ்டேட்டிலும் கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் சோதனை நடந்தது. எஸ்டேட் மேனேஜரும் கோயமுத்தூரிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு கடுமையாக விசாரிக்கப்பட்டார். 

கொடநாடு தேயிலை எஸ்டேட் மற்றும் அங்கிருக்கும் டீ தூள் தொழிற்சாலையின் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் கணக்கு வழக்கள் யாவும் சசியின் கணவரான மறைந்த எம்.நடராஜனின் தம்பியிடம் ஒப்படைக்கப்பட்டு வருவதாக மேனேஜர் நடராஜன், விசாரணை அதிகாரிகளிடம் சொல்லியிருந்தார். இது போக இளவரசியின் மகன் விவேக்கும் அவ்வப்போது கொடநாடு சென்று வருவதன் மூலமாக அந்த சொத்துக்களை சசி கோஷ்டிதான் பக்காவாக நிர்வாகம் செய்து கொண்டிருப்பது புலனாகியது. 

இந்த பங்களா முகவரியிலிருந்து கொடநாடு அருகே இருக்கும் ஈளாடா வங்கியில் பல நூறு கணக்குகள் துவக்கப்பட்டு, அவற்றில் பல நூறு கோடி பணம் போடப்பட்டு புழங்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வலுவாக உண்டு. இந்நிலையில்தான், ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக், ‘கொடநாடு பங்களாவை வைத்து கடன் வாங்கப்பட்டுள்ளது. அடமான கடனுக்காக வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது.’ என்று ஒரு பட்டாசை திரி கொளுத்திப் போட்டுள்ளார். 

இது அரசியலரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருது கோயமுத்தூருக்கு தனி விமானத்தில் பறந்து வந்து, அங்கிருந்து பிரைவேட் ஹெலிகாப்டரில் ஏறி கொடநாடிலேயே வந்திறங்குவார் ஜெ., ஹெலிபேடிலிருந்து பங்களாவுக்குள் அவர் செல்வதற்குள் கூடியிருக்கும் கட்சியினர், தொண்டர்கள், மக்களால் திமிலோகப்படும் அந்த பங்களா. பொன் விளையும் பூமியாக கோடநாடு எஸ்டேட்டும், அந்த பொன்னை குவித்து வைக்கும் பெட்டகமாக கொடநாடு பங்களாவும் பார்க்கப்பட்ட நிலையில், இன்று அது ஒரு ’அடமான பொருள்’ என்று பெயரெடுத்துள்ளது விதியே!