ஏரியா தாண்டி வந்து பஞ்சாயத்து பண்ணிய கே.என்.நேரு...? வேட்பாளரை மாத்து இல்லேன்னா ஓட்டு கேட்க மாட்டோம்... பொள்ளாச்சியால் ஸ்டாலினுக்கு புது தலைவலி..!
சண்முகசுந்தரம் பக்கா பிஸ்னஸ் மேன். கே.என்.நேருவின் குடும்பத்து ஆளுங்களோட சேர்ந்து பிஸ்னஸ் பண்ணிட்டு இருந்தார். அந்த அடிப்படையில் நேரு சொல்லித்தான் இவருக்கு இங்கே சீட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். எங்க கட்சியின் முக்கிய பில்லர்களான பொன்முடி, துரைமுருகன் மகன்களுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்குது.
கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து வெடித்துக் கிளம்பியிருக்கும் ‘செக்ஸ் வக்கிரம்’ விவகாரத்தால் அங்கே ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு உருவாகியுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி, நறுக்குன்னு ஒரு வேட்பாளரை நிறுத்தி, எளிதாய் வெற்றி பெறும் நம்ம கட்சி! என்று பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வினர் எதிர்பார்த்தார்களாம். ஆனால் தலைமை டோட்டலாக சொதப்பிவிட்டதாக நேற்றிலிருந்து புலம்புவதோடு, தலைமைக்கு எதிராக குமுறலையும் துவங்கிவிட்டனர்.
விவகாரம் இதுதான்...பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக சண்முக சுந்தரம் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர். இப்போது மீண்டும் அவருக்கே தலைமை சீட் கொடுத்திருக்கும் நிலையில் பொள்ளாச்சி தொகுதி தி.மு.க.வினர் கொதித்து எழுந்துள்ளனர்.
ஏன்? என்று கேட்டபோது “சண்முகசுந்தரம் பக்கா பிஸ்னஸ் மேன். கே.என்.நேருவின் குடும்பத்து ஆளுங்களோட சேர்ந்து பிஸ்னஸ் பண்ணிட்டு இருந்தார். அந்த அடிப்படையில் நேரு சொல்லித்தான் இவருக்கு இங்கே சீட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். எங்க கட்சியின் முக்கிய பில்லர்களான பொன்முடி, துரைமுருகன் மகன்களுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்குது. அதேபோல நேருவுக்கு ஒரு கோட்டா ஒதுக்கியிருக்கார். அதுல தன் குடும்பத்து ஆளுங்க யாருக்கும் சீட் கேட்கும் சூழ்நிலை இல்லாத நிலையில சண்முக சுந்தரத்துக்கு வாங்கி கொடுத்திருக்கிறார் நேரு.
திருச்சியில் கோலோச்சும் நேரு கரூர், திருப்பூர், ஈரோடுன்னு மூன்று மாவட்டங்கள் தாண்டி வந்து கோயமுத்தூர் மாவட்ட அரசியலில் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியமென்ன? அப்போ, இங்கே கட்சியை வழிநடத்த சரியான தலைவர் இல்லைன்னுதானே அர்த்தம்! ஒரு காலத்துல கோவை தி.மு.க.வில் கோலோச்சுன பொங்கலூர் பழனிசாமியெல்லாம் இப்போ கடனுக்குதான் கட்சி வேலை பார்க்கிறார். அவரெல்லாம் உண்மையான உழைப்பை கொட்டி, கட்சியை தலைமையேற்றி வலுவா வழிநடத்தினால் இப்படி நேருவெல்லாம் ஏரியா மாறி வந்து பஞ்சாயத்து பண்ணுவாரா? சரி, நேருவால் சீட் வாங்கிக் கொடுக்கப்பட்ட சண்முகசுந்தரம் நல்ல கேண்டிடேட்டாக இருந்தால் கூட பிரச்னை இல்லை.
ஆனால் ரெகுலராக கட்சி பணிகளுக்கே வராத ஒரு நபர் அவர். 2009 தேர்தலில் தோற்ற பின் கட்சியை கண்டுக்காம, முழுக்க முழுக்க பிஸ்னஸில் பிஸியான மனிதர். இன்னைக்கு தேர்தல்னு வந்ததும் நேருவை பிடிச்சு, பைபாஸில் வந்து சீட் வாங்கிட்டார். அப்போ, பணத்தையும் நேரத்தையும் கொட்டியழுது வெயில்லேயும், மழையிலேயும் கெடந்து கட்சியை வளர்த்து காசை செலவழிச்சவன் கடைசி வரைக்கும் போஸ்டர் ஒட்டிட்டே இருக்கணுமா? பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தால் இங்கே அ.தி.மு.க.வின் மதிப்பு சுருண்டு கிடக்கும் நிலையில், நல்ல கேண்டிடேட்டை நிறுத்தியிருந்தால் எங்கள் கட்சி இங்கே ஈஸியா ஜெயிக்கலாம்.
ஆனால், எங்கே கட்சி வேலை பார்த்தால் கை அழுக்காகும்னு சொல்லி ஒயிட் காலராய் வாழ்ந்த சண்முகசுந்தரத்துக்காக நாங்க களமிறங்கி உழைச்சு வேட்டி சட்டையை அழுக்காக்க முடியாது. கழக வளர்ச்சிக்காக உழைச்ச, உண்மையான கட்சிக்காரரை நிறுத்தினால் உயிரை கொடுத்து வேலை பார்ப்போம். ஆளை மாத்துங்க! இல்லேன்னா ஓட்டு கேட்க மாட்டோம்னு அறிவாலய கவனத்துக்கு கொண்டு போயிட்டோம்.” என்று கொதித்தனர். என்ன செய்யப்போறார் ஸ்டாலின்?