திமுக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் நிலையிலும் திருச்சி மாவட்ட திமுக உட்கட்சி தேர்தலை நடத்தும் பொறுப்பு கே.என்.நேருவிடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளை கழக தேர்தலை முதலில் பிரச்சனை இல்லாமல் சுமூகமாக நடத்த கே.என்.நேரு திட்டமிட்டு அதற்கான ஆலோசனை கூட்டத்தில் திருச்சியில் நேற்று நடத்தினார். இந்த கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்களான அன்பில் மகேஷ் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் ஆரம்பத்திலேயே மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஷ் பேசினார். வழக்கம் போல் கலைஞர், ஸ்டாலின், உதயநிதியை அவர் புகழ்ந்து தள்ளினார். பிறகு லோக்கல் அரசியலுக்கு வந்தவர், தன்னை அரசியலுக்கு அழைத்து வந்ததே கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் தான் என்று கூறி நெகிழ வைத்தார். மேலும் தற்போது முதன்மைச் செயலாளராக உயர்ந்துள்ள கே.என்.நேரு திமுகவிற்காக செய்த பணிகளை பட்டியலிட்டார். மேலும் அவர் இந்த பொறுப்பை பெற பட்ட கஷ்டங்களையும் ஒன்றுவிடாமல் அன்பில் மகேஷ் கூறினார்.

இதனை பார்த்து கே.என்.நேரு ஆதரவாளர்களே மிரண்டு போயினர். காரணம் திருச்சி திமுக சீனியர்களுக்கே தெரியாத பல விஷயங்கள் குறித்து அன்பில் மகேஷ் அசத்தலாக பேசிக் கொண்டிருந்தார். மேலும் திருச்சி மாவட்ட திமுகவில் இருக்கும் கோஷ்டி பூசலையும் அவர் வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் மறைமுகமாக பேசினார். மேலும் ஒற்றுமை அவசியம் என்றும், உட்கட்சி தேர்தல் அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போகிற போக்கில் புதுமுகங்களுக்கும், கட்சிக்கு நீண்ட காலமாக உழைக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார். இவ்வாறு திருச்சி மாவட்ட திமுக செயலாளர்கள் அனைவரும் பேசி முடித்த பிறகு கடைசியாக கே.என்.நேரு பேசினார். அவர் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு திருச்சியில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதனால் அவர் பேச வந்த போது பலத்த உற்சாக கரவொலி எழுந்தது. அனைத்தையும் கேட்டுக் கொண்டு துவக்கம் முதலே நெகிழ்ச்சியாகவும், உருக்கமாகவுமே நேரு பேசினார். மேலும் தன்னை மாவட்டச் செயலாளராக கலைஞர் நியமித்த போது உள்ளூரில் யாருமே ஆதரிக்கவில்லை என்றார். மேலும் தன்னை கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மாவட்டச் செயலாளர்களாக ஏற்கனவே 7 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் கூறி வருத்தப்பட்டார். ஆனால் தற்போது தான் உயரிய பொறுப்புக்கு வந்ததை அனைவரும் எளிதான ஒன்றாக கருதுவதாகவும் ஆனால் இதற்கு தான் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் கொஞ்சம் நஞ்சம் அல்ல என்றும் கூறி நேரு அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்தார்.

பிறகு உட்கட்சி தேர்தலை பற்றி பேசிய நேரு, தலைமை கூறியதற்கு கீழ்ப்படிந்து அனைவரும் நடக்க வேண்டும் என்றார். அனைத்து பதவிகளுக்கும் போட்டியின்றியே நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் எங்கும் பிரச்சனை வந்துவிடக்வடாது என்றும் நேரு நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார். நீண்ட நாட்களாக பொறுப்பில் உள்ளவர்கள் புதியவர்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், செயல்படாமல் இருப்பவர்களை மாற்றுமாறு தலைமை கூறியுள்ளதால் அவர்கள் பிரச்சனை இல்லாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது என்கிற ரீதியிலும் நேரு எச்சரித்துள்ளார். 1993ம் ஆண்டே கலைஞர், அவரது மகன், அவரது பேரன் என யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பது என்று தான் வாக்கு கொடுத்துள்ளதாகவும் அது தற்போது நிறைவேறிக் கொண்டிருப்பதாகவும் கூறி ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் ஓயப்போவதில்லை என்றும் நேரு சூளுரைத்தார். மேலும் உட்கட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டு தன்னை இந்த விஷயத்தில் இழுக்க வேண்டாம் என்பது போல் கூறிவிட்டு புறப்பட்டார் நேரு.