கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அதேபோல், நலத்திட்ட உதவிகள், நிவாரணப் பணிகள் என களத்தில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொற்று பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, சென்னை தொற்று குறைந்த நிலையில் மதுரை, விருதுநகர், வேலூர், செங்கல்பட்டு, குமரி உள்ளிட்ட மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார்(45) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கிள்ளியூர் ஆரம்பசுகாதார நிலையத்தில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டதில் நேற்று இரவு முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.