ஒரு நாள் ரெண்டு நாள்னா பரவால்ல! பேருந்து நிலையம் திறந்து 40 நாளும் இதே பிரச்சனைனா எப்படி? கிருஷ்ணசாமி விளாசல்!
குடும்பம் குடும்பமாகப் பயணிக்கக் குழந்தைகளோடு இரவு நேரங்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருபவர்கள் தொலைதூர மாவட்டங்களுக்குச் செல்ல முடியாமல் பல மணி நேரங்கள் காத்துக் கிடப்பது அவலத்திலும் அவலம்.
போதிய இணைப்பு மற்றும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அதிகரிப்பதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சனைக்கு தமிழ்நாடு அரசு விரைந்து தீர்வு காண என கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஏறக்குறைய 100 ஏக்கர் பரப்பளவில் சென்னை புறநகரில் உள்ள கிளாம்பாக்கம் என்ற பகுதியில் அண்மையில் தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து இயங்கி வந்த அனைத்து அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லையா.? போராட்டத்திற்கு காரணம் என்ன.? போக்குவரத்து கழகம் விளக்கம்
பரந்துபட்ட சென்னையின் பல பகுதிகளிலிருந்து பயணிகள் கிளாம்பாக்கத்தை சென்றடைவதற்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இரவு பகல் என்று பாராது அப்பேருந்து நிலையத்தை அடையும் பயணிகள் சென்னையில் தங்களுடைய இருப்பிடங்களுக்குச் செல்ல ஏதுவாகப் போதிய நகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பும் இருந்தது. ஆனால், 40 நாட்களுக்குப் பிறகும், போதிய அளவு இணைப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டுப் பெரிதும் உள்ளது.
இதையும் படிங்க: சென்னைக்கு கொண்டுவரப்பட்ட மூளை திசு பகுதி..! சைதை துரைசாமியின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போனதா.? வெளியான தகவல்
மேலும், அப்பேருந்து நிலையத்தில் இன்னும் கழிப்பிட வசதிகள் மற்றும் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு உண்டான இட வசதிகள் இல்லை என்ற புகார்கள் எழுந்தவண்ணம் இருப்பதோடு மட்டுமின்றி, அண்மைக்காலமாகப் பயணிகளே சாலை மறியலில் ஈடுபடக்கூடிய போக்குகளும் உருவாகி வருகின்றன. இந்த அதிருப்தி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது நல்லதல்ல. தொழில், வணிகம், வேலை வாய்ப்புகள் மற்றும் குடும்ப நிகழ்வுகள் ஆகியவற்றை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை வந்து செல்கின்றனர். அனைவராலும் முன்பதிவு செய்து ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்ய இயலாது; அது எல்லோராலும் சாத்தியமானதும் அல்ல. குடும்பம் குடும்பமாகப் பயணிக்கக் குழந்தைகளோடு இரவு நேரங்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருபவர்கள் தொலைதூர மாவட்டங்களுக்குச் செல்ல முடியாமல் பல மணி நேரங்கள் காத்துக் கிடப்பது அவலத்திலும் அவலம்.
இரண்டொரு நாள் அல்லது ஓரிரு வாரம் என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால், பேருந்து நிலையம் திறந்து ஏறக்குறைய 40 நாட்கள் ஆகியும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணாதது ஏற்புடையதல்ல. போதிய இணைப்பு மற்றும் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அதிகரிப்பதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சனைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வலியுறுத்துகிறேன் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.