இன்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது என்றும் வரும் காலத்தில் தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்றும் ஹெச்.ராஜா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக திட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவிடம் வீழ்ந்தது. இந்த நிலையில் பாஜக தொண்டர்கள் அங்குள்ள லெனின் சிலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றியுள்ளனர்.

இது குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது பேஸ்புக் பக்கத்தில், கம்யூனிசத்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை... தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா. சிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஈரோட்டில் நேற்று மதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, பெரியார் மீது கை வைத்தால் நடப்பதே வேறு என்று கூறியுள்ளார். அதே கூட்டத்தில் பேசிய கி.வீரமணி, இந்த சந்தர்ப்பத்திலாவது ஹெச்.ராஜா மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஹெச்.ராஜாவை கைது செய்வது மட்டும் அல்லாமல் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார்.

ஹெச்.ராஜாவின் பேஸ்புக் பதிவுக்கு, கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹெச்.ராஜா, உடனே அந்த பதிவை நீக்கியுள்ளார். ஆனாலும், அவர் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜாவின் பதிவுக்கு கடுமையாக திட்டி பதிவிட்டுள்ளார். அதில் எச்சை ராஜா என்று குறிப்பிட்டுள்ளார். ஹெச்.ராஜா குறித்து குஷ்பு வெளிப்படையாக டுவிட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.