கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி  வருபவர் கே.கே.ஷைலஜா. இவர் கடந்த ஆண்டு கேரள மாறிலத்தில் வெள்ளம் வந்தபோது முதலமைச்சர் பினராயி விஜயனுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டார். கேரள அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இரண்டு பெண் அமைச்சர்களில் ஷைலஜாவும் ஒருவர். கன்னூரில் பிறந்த இவர், ஆசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். ஆசிரியராக இருந்ததால் ஷைலஜா டீச்சர் என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறார்..

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக தனது ஃபேஸ் புக்கில் பதிவிட்டிருந்தார். அதற்கு கீழே கமெண்ட் என்ற இடத்தில் ஜியாஸ் மாதசேரி என்னும் இளைஞர், “டியர் டீச்சர், எனக்கு வேறு வழியில்லாததால் இதனை எழுதுகிறேன். என் சகோதரிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு துரதிருஷ்டவசமாக இதய வால்வு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்களின் அறிவுரைப்படி, குழந்தையை மலப்புரா மாவட்டத்திலுள்ள எடுகரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றோம்.

சில சோதனைகளை செய்த மருத்துவர்கள், அம்ருதா மருத்துவமனையிலோ அல்லது ஸ்ரீ சித்ரா மருத்துவமனையிலோ சேர்க்கக் கூறினர். நாங்கள் அந்த மருத்துவமனைகளைத் தொடர்புகொண்டபோது, அங்கு காலிப் படுக்கைகள் இல்லை என்று கைவிரித்துவிட்டனர். அந்த மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லாவிட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களுக்கு உதவ வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த அமைச்சர்  ஷைலஜா, அடுத்த சில மணி நேரத்தில் ஜியாஸின் பதிவுக்கு பதிலளித்துள்ளார். அதில், “உங்களுடைய பதிவை படித்த பின்னர் அதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளரிடமும் ஹிருதயம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரிடமும் அறிக்கை கேட்டேன். 

ஹிருதயம் திட்டத்தின் கீழ் குழந்தைக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எர்ணாகுளத்திலுள்ள லிசி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். குழந்தையை அழைத்துவருவதற்காக தற்போது எடப்பாலில் இருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டுவிட்டது” என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து குழந்தை இன்று காலை லிசி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. . அமைச்சரின் உடனடி நடவடிக்கை மூலம் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகிறது