கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை ஈடுபட்ட மத்திய அரசிடம் அம்மாநில அரசு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவித் தொகை கேட்டிருந்த நிலையில் மத்தய அரசு தற்போது வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. ஏராளமான வீடுகள் மூழ்கின. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. பல லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரள மாநில நிவாரணப் பணிகளுக்காக மத்திய  அரசிடம் ரூ.1000 கோடி கேட்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார்  1000 கோடி ரூபாய்க்கான  அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

 இதில் விவசாயத்திற்காக மட்டும் ரூ.200 கோடி நிவாரணம் கேட்கப்பட்டது. இந்நிலையில்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

இதையடுத்து ரூ.80 கோடியை மத்திய அரசு நிவாரணமாக கேரளாவிற்கு அளித்தார். இது முதல்கட்டம் என்றும், மீண்டும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கூறிச் சென்றார். 

ஆனாலும் கேரளாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வெறும் 80 கோடி ரூபாய் மட்டும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பது கேரள அரசையும், பொது மக்களையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.