லாட்டரியில் ஒரு கோடி பரிசு விழுந்ததால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூலி தொழிலாளி ஒருவர் காவல் நிலையத்திற்கு வந்த சம்பவம்  கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிச்சுகிட்டு கொடுக்கும் என்று சொல்வார்கள் சில நேரங்களில் அதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.   அதுவும் கேரளாவில் இச் சம்பவங்கள் அதிகமாகவே நடக்கிறது  என்றே சொல்லலாம் காரணம் அங்குதான் லாட்டரி விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது .  அடிக்கடி லாட்டரியில் பரிசு விழுபவர்களின் எண்ணிக்கையும் அம்மாநிலத்தில் அதிகமாக உள்ளது . 

சமீபத்தில் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் திண்டாடி வந்த ஒரு நபருக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது அந்த நபர் பாதுகாப்புக்கு கேட்டு காவல் நிலையம் சென்றுள்ள சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது .  மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் தாஜ் முல்ஹக்  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தங்களது மாநிலத்தில் நிலவிய வறுமையின் காரணமாக கூலி வேலை செய்து பிழைக்க கேரளாவில் தஞ்சமடைந்தார் .  கேரளாவிலேயே திருமணம் செய்து கொண்ட அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன .  குடும்ப வறுமைக்கு இடையிலும் லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் அவர் . இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லாட்டரி ஒன்றை வாங்கினார்  தாஜ் முல்ஹக் அவருக்கு  எதிர்பாராதவிதமாக அதில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்தது .  தாஜ் முல்ஹக்கிற்கு  பரிசு விழுந்ததும் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார் . 

ஆனால் சிலர் அவரிடமிருந்த லாட்டரி சீட்டை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது .  ஒரு கோடி பரிசு விழுந்த நிலையில் அந்தப் பரிசை எப்படி வாங்குவது என அவருக்கு தெரியாமல் அவர் திகைத்துள்ளார்.  எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோழிக்கோடு காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்தார்.  புகாரை பெற்ற போலீசார்  முதலில் அவருக்கு லாட்டரி சீட்டில் பரிசு விழுந்துள்ளது  உண்மைதானா என உறுதி செய்தனர் .  பிறகு அவரிடமிருந்து லாட்டரி சீட்டு பெற்று அவருக்கு  முறையாக பணத்தை பெற்றுக் கொடுத்தனர் .  இதனால் கோழிக்கோடு போலீசாருக்கு தாஜ் முல்ஹக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர் . இது குறித்து கூறியுள்ள  தாஜ்முல்ஹக்  இது நாள் வரை நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள்  தீர்ந்துவிட்டது லாட்டரியில் சீட்டில் கிடைத்த  பணத்தை வைத்து குடும்பத்துடன்  மகிழ்ச்சியாக வாழப்போகிறேன் என்றார்.