கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் மர்ம கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்,  ராஜேஷ், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு 9 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

திருவனந்தபுரம் அருகே ஸ்ரீகார்யம் என்ற பகுதியில் வந்த போது அவரை வழி மறித்த 15 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.

இதில் அவரது கைகள் துண்டாகின. பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இடது சாரிகட்சிகளை சேர்ந்தவர்களின் தூண்டுதலால் கூலிப்படையினர் இந்தகொலையை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் முன்விரோதம் காரணமாக ராஜேஸ் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராஜேஸ் கொலை செய்யப்பட்டதை அடுத்து திருவனந்தபுரத்தில் பதற்றம் நிலவுகிறது. மேலும் ராஜேஸ் கொலையைக் கண்டித்து கேரளாவில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று  வருகிறது.