ஆந்திராவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்டுள்ள திஷா சட்டத்தைப்போல கேரளாவிலும் கொண்டுவர அச்சட்டம் ஆய்வு செய்யப்படும் என கேரளா அமைச்சர் கே .கே சைலஜா உறுதியளித்துள்ளார் .   தெலங்கானாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் கொலை  நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது ,  அந்த வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர் .  இதனையடுத்து  பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் தெலங்கானா ,  ஆந்திரா ,  உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். 

இந்நிலையில்  ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க புதிய  சட்டமொன்று  கொண்டு வரப்படும் எனவும் ,  அச்சட்டத்தின்படி பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கப்படும் எனவும் அதிரடியாக  அறிவித்தார்.  அதில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பின் ஏழு நாட்களில் காவல்துறை விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்றும்,   அடுத்த 14 நாட்களில் நீதிமன்றம்  தீர்ப்பு அளிக்கும் வகையில்  ஆந்திராவில் சட்டம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.   இச்சட்டத்தின் மூலம் 21 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற  இச்சட்டம் வழிவகை செய்கிறது .  அதே போல் பெண்களை சமூக வலைதளங்கள் மூலமாகவும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலமாகவும் துன்புறுத்தினால்,  முதல் முறையாக குற்றம் செய்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும்   அடுத்தடுத்து தொடர்ந்து செய்பவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில்  354 இ சட்டப்பிரிவு இணைக்கப்பட்டுள்ளது . 

இச்சட்டத்திற்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை என்றாலும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.  ஆந்திர மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இதேபோன்ற சட்டத்தை,  கேரளாவில் கொண்டுவருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும்  கேரள மாநிலத்தின் சமூகநலத்துறை அமைச்சர் கே.கே சைலஜா தெரிவித்துள்ளார் .  இதுகுறித்து பேசிய அவர் ஆந்திராவில் கொண்டுவரப்பட்டுள்ள திஷா மசோதாவை கேரளாவும் ஆய்வுசெய்யும்,  அச்சட்டத்தில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்பது குறித்து தெரிந்த பின்னர் .  கேரளாவில் அமல்படுத்துவது குறித்து முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளார் .