தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு பணிகளை தொடங்கினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கேரள மாநில முதலமைச்சர் அதிகாரிகளை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்தியாவில் சட்டவிரோதமாக  ஊடுருவி உள்ள அண்டை நாட்டவர்களை, கண்டறிந்து அவர்களை வெளியேற்றும் அடிப்படையில் மத்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணியை தொடங்க உள்ளது .  இதேநேரத்தில் இந்திய குடியுரிமை சட்டம் கொண்டுவந்து அதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும்நிலையில்  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இக்கணக்கொடுப்பின்போது  இந்திய குடிமக்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் அவர்களை நாடு கடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  எனவே இம் மக்கள் தொகை பதிவேட்டுப் பணிகளைத் தொடங்க கூடாது  என கேரளா மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்ப்பு காட்டி வருகின்றன. கடந்த மாதம் 24ஆம் தேதி சென்செக்ஸ் 2021 மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 பணிகளுக்காக சுமார் 850 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது , இந்நிலையில் வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது .  இந்நிலையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் மக்கள் தொகை பதிவேடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர் . 

இந்நிலையில் கேரள அரசு ஒரு படி மேலே போய் தங்கள் மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பாக எந்த ஒரு பணிகளையும் தொடங்கக்கூடாது அப்படி ஏதாவது  நடவடிக்கைகளில் ஈடுபட்டால்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.   இந்நிலையில் கேரள அரசின் பொது நிர்வாக துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடர்பான எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ள இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் ,  மாநில அரசின் உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளார்.