உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அடி மேல் அடி வாங்கும் திமுக உச்சநீதிமன்றத்தில் நல்ல வழக்கறிஞரை வைத்து வாதாடலாம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவுரை வழங்கியுள்ளார். 

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே திமுகவில் டாப் லெவல் வழக்கறிஞர் டீம் பிசியாகவே இருந்து வருகிறது. இரவு பகல் பாராமல் உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக மூத்த வழக்கறிஞர்கள் உழைத்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் உழைப்பு அனைத்துமே எதிர்பார்ப்பிற்கு மாறான முடிவுகளையே உச்சநீதிமன்றத்தில் அளித்து வருகிறது. எவ்வளவோ முயன்றும் 9 மாவட்டங்களில் மட்டும் தான் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை பெற முடிந்தது.

 மற்றபடி திட்டமிட்டபடி 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30ந் தேதிகளில் ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரியில் நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு உட்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுகவிற்கும் – சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கும் நேரடியாக மோதல் மூண்டுள்ளது. தேர்தலை நிறுத்த வேண்டும் என்று திமுக கங்கனம் கட்டிக் கொண்டு களம் இறங்கிய நிலையில் அது எப்படி நடக்கிறது பார்ப்போம் என களம் இறங்கினார் சி.வி. சண்முகம்.

டெல்லியில் முகாமிட்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு அனுமதி பெற்ற பிறகே அவர் சென்னை திரும்பினார். முன்னதாக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை இல்லை என்கிற தீர்ப்பை பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டது போல பேசியிருந்தார். சண்முகத்தின் இந்த பேச்சு திமுக தரப்பை பெரும் எரிச்சலடைய வைத்துள்ளது. இதனால் சி.வி. சண்முகத்தை பெயர் குறிப்பிடாமல் முரசொலியில் தனிநபர் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

 அதிலும் சி.வி. சண்முகம் போதையில் இருக்க கூடியவர், தள்ளாடக் கூடியவர் என முரசொலி எழுதிய கட்டுரை சண்முகத்தை டென்சன் ஆக்கியது. இதனால் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சண்முகம், தன்னுடைய பணிகளில் குறையை கண்டுபிடிக்க முடியாமல் தன்னை தனிப்பட்ட முறையில் திமுக தாக்குவதாக கொந்தளித்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு சட்டப்போராட்டம் நடத்தி நாங்கள் வென்றுள்ளோம்.

 உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு அந்த தீர்ப்பில் விளக்கம் கேட்டு திமுக தரப்பு உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுகியதாகவும் அப்போது டென்சன் ஆன நீதிபதிகள், திமுகவிற்கு தேர்தலை நடத்தக்கூடாது என்கிற எண்ணம் இருப்பது போல் தெரிகிறது என்று வெளிப்படையாகவே கேட்டதாகவும் கூறினார். சண்முகம். இப்படி எல்லாம் ஒரு தர்மசங்கடமான நிலை வரக்கூடாது என்றால் உச்சநீதிமன்றத்தில் திமுக நல்ல வழக்கறிஞர்களை அமர்த்தி வாதாட வேண்டும் என்றும் சண்முகம் அட்வைஸ் கொடுத்துள்ளார்.உள்ளாட்சித் தேர்தல் வழக்குகளில் திமுக சார்பில் எம்பியாகியுள்ள வில்சனும், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிசேக் மனு சிங்வியும் ஆஜராகி வருவது குறிப்பிடத்தக்கது.