வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக  சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரை முருகனின்  மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிகட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார். அவர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அத்தி வரதரை வழிபட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  கதிர் ஆனந்த், 40 வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் விழா என்பதால் அத்திவரதரை வழிபட வந்தேன். தேர்தல் வெற்றிக்காக வழிபட வரவில்லை. தி.மு.க. ஆன்மீக பாதையில் செல்லவில்லை. ஏற்கனவே பயணித்த பாதையில்தான் செல்கிறது.

பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் கனிமொழியால் வேலூர் தொகுதியில் பிரசாரத்துக்கு வரமுடியவில்லை. எனினும் அவர் அன்றாட நிகழ்வுகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டு அறிந்து வந்தார். வேலூர் தொகுதி தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார்..

திமுகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் துரை முருகனின் மகன் அத்திவரதரை வழிபட வந்தது அங்கிருந்த பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.