காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

குறிப்பாக ஊரடங்கு, தொலைதொடர்பு சேவை ரத்து, சமூக வலைத்தளங்கள் முடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளன. 

ராணுவம், துணை ராணுவம் மற்றும் மாநில போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். முக்கியமான நகரங்களில் 100 மீ. இடைவெளியில் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

இவ்வளவு விழிப்புடன் கண்காணித்த பிறகும், ஸ்ரீநகரின் ராம்பக், பார்சுல்லா, நூர்பாக், பெமினா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசப்பட்டன. இதைத்தவிர வேறு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை.


காஷ்மீர் பகுதி, முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலம் என்பதால் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்திருந்தது.  அதன்படி முஸ்லிம்களின் தொழுகைக்காக நேற்று மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 

மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், சமூக விரோத செயல்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு படையினர் தீவிர உஷார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். எனினும் சோபூரில் இளைஞர்களின் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. அவர்களை ராணுவம் துரத்தியடித்தது. எனினும் பெரும்பாலும் அமைதியான சூழலே நிலவி வருகிறது. 144 -தடை உத்தரவு நேற்று விலக்கிக்  கொள்ளப்பட்ட நிலையில், ஜம்முவில்  இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.