ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்பின் 370வது பிரிவு நீக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அத்தோடு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அறிவித்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை பாஜக எம்பிக்கள் மற்றும் பாஜக தலைவர்கள் கொண்டாடி வருகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க நாள் என மகிழ்ந்து வருகிறார்கள். இந்த மசோதாவுக்கு சில எதிர்க்கட்சிகள் பாராட்டும் தெரிவித்துள்ளன. தைரியமான முடிவு என புகழ்ந்து வருகின்றன. 70 ஆண்டுகளாக தேசத்தின் கோரிக்கை  இப்போது நம் கண்முன், நம் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் காங்கிரஸ், திமுக, தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பாஜக மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் மோடி அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது  பிரிவு ரத்து செய்யப்பட்ட இந்த நாள் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்…. 70 ஆண்டுகளாக காஷ்மீரைப் பிடித்திருந்த பிரச்சனை தற்போது உடைத்தெறியப்பட்டுள்ளது.

இனி ஜம்மு – காஷ்மீர் மக்கள் ஒரு சிறந்த நிர்வாகத்தையும், வளர்ச்சியையும் பெறுவார்கள்… இதற்காக பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளிடமிருந்து  ஜம்மு – காஷ்மீர் மீட்கப்பட்டுள்ளது. மோடி- அமித் ஷா – அஜித் தோவல் ஆகியோரின் கூட்டணி இந்த மகத்தான  சாதனையைப் படைத்துள்ளது என ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.