கொரோனா வைரஸ் காரணமாக வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கான இ.எம்.ஐ. செலுத்துவதில் ஆகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் அளித்தது. ஆனால், கால அவகாசம் அளிக்கப்பட்ட காலத்தில் செலுத்தப்படாத வட்டித் தொகைக்கு வட்டித் தொகை வசூலிக்கப்படும் என வங்கிகள் அறிவித்தன. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, “வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது. பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும் வகையிலான எந்த முடிவையும் எடுக்க முடியாது” என்று தெரிவித்தது.
இதனையடுத்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்றுஅறிவித்த மத்திய அரசை அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி. ஜோதிமணியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் போக்கை விமர்சித்துள்ளார்.


இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாதாந்திர தவணையே கட்ட முடியாமல் மக்கள் பொருளாதார பேரழிவால் தடுமாறிக்கொண்டிருக்கும்போது வட்டிக்கு வட்டிபோடுவோம் என்று சொல்லும் மோடி அரசு  எவ்வளவு கருணையற்றது. ஆனால் இதே அரசுதான் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் வாங்கி வங்கி மோசடி செய்த மோடியின் நண்பர்கள்  வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல உதவுகிறது” என்று ஜோதிமணி ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.