கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி பேசி சர்ச்சையிலும் வழக்குகளிலும் சிக்கியுள்ள கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன், இன்னும் கொஞ்சம் கூட அடங்காமல், மறுபடியும் மிகத்திமிராக ஆபாச வார்த்தைகளில் பேசியுள்ளார். 

மூடநம்பிக்கைக்கு எதிராகவும் பகுத்தறிவை புகட்டுவதாகவும் கூறிக்கொண்டு இந்து மத நம்பிக்கைகளை நக்கலடிக்கும் விதமாகவும் இந்து கடவுள்களையும் புராணங்களையும் அசிங்கப்படுத்தும், கொச்சைப்படுத்தும் வகையிலும் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. 

அதில், கந்தசஷ்டி கவசத்தையும் இந்து கடவுள் முருகனையும், காது கொடுத்து கேட்கவே முடியாத வகையில், மிகவும் ஆபாசமாகவும் அருவெறுக்கத்தக்க வகையிலும் சுரேந்திரன் கொச்சைப்படுத்தி வீடியோ பதிவிட்டிருந்தார். அதைக்கண்ட இந்துக்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினரும், இந்த அத்துமீறிய செயலுக்கு கடும் கண்டங்களை தெரிவித்துவருகின்றனர். 

இந்து மக்களின் மத உணர்வையும் நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் விதமாக இந்த விஷயம் அமைந்துள்ளது. இந்துமத தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் இதிகாசங்களையும் புராணங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி பதிவுகளை வெளியிட்டு இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்திவருவதுடன், சமூகத்தில் அசாதாரண சூழலை ஏற்படுத்திவரும் கறுப்பர் கூட்டத்தின் சுரேந்திரன் நடராஜன் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. 

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது சாதி, மத, இன ரீதியான மோதலை தூண்டுவது, அவதூறு பரப்புதல் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். நேற்றிரவு கறுப்பர் கூட்டத்தின் செந்தில் வாசனை போலீஸார் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த சுரேந்திரனை போலீஸார் தேடிவந்தனர். சுரேந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்நிலையில் இன்று புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தார் சுரேந்திரன்.

ஏற்கனவே இந்துக்களின் கடுங்கோபத்திற்கு ஆளாகியிருக்கும் சுரேந்திரன், கொஞ்சம் கூட அடங்காமல், நான் அப்படித்தான் பேசுவேன்; என்ன செய்ய முடியும் என்கிற ரீதியில், மீண்டும் முருகன் குறித்தும் கந்தசஷ்டி குறித்தும் ஆபாசமாக பேசியிருக்கிறார். 

காவல்நிலையத்தில் சரணடையும்போது பேசியிருக்கும் சுரேந்திரன், கந்தசஷ்டி கவசத்தில் இல்லாததை நான் பேசவில்லை. இலக்கிய மொழியில் எழுதப்பட்டிருப்பதை மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் மக்களின் மொழியில் எடுத்துச்சொன்னேன் என்று கூறியுள்ளார்.(இந்த கருத்தை சொல்லும்போது மறுபடியும் ஆபாசமான வார்த்தைகளால் மிகத்திமிராக பேசியுள்ளார்)

நோய் தீர்க்கக்கோரிய பிரார்த்தனை என்றால், அதை தெளிவாக எழுதியிருக்க வேண்டும். அழகு தமிழில் முருகனை பிரார்த்திக்க வேண்டும். அப்படியில்லாமல் உடலுறப்புகளை(இந்த இடத்தில் கொச்சையான வார்த்தை பிரயோகம்) காக்க முருகனை அழைப்பது முருகனை இழிவுபடுத்துவதாகௌம். தெளிவாக எழுதாதால் நான் தெளிவாக எடுத்துச்சொன்னேன். அது தவறா? அப்படி அது தவறு என்றால், என்னை குற்றம் சொல்வதற்கு முன், புராண, இதிகாச குப்பைகளை கொளுத்திவிட்டு பேசுங்கள் என்றும் மறுபடியும் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் நக்கலான தொணியிலும் திமிராக பேசியுள்ளார் சுரேந்திரன். (குறிப்பு: முழுவதுமாகவே ஆபாசமாகத்தான் பேசியிருக்கிறார். அதை எழுத முடியாது. கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்)