கந்தசஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்ததை தொடர்ந்து கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் க்ரைம் போலீசார் நீக்கியுள்ளனர். 

கருப்பர் கூட்டம் என்ற  யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் ந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மதக் கலவரத்தை துாண்ட முயற்சிக்கும், சேனல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். 

பின்னர், கருப்பர் கூட்டம் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது, மத கலவரத்தை துாண்ட முயற்சி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்தில்வாசன், சுரேந்தர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு மத்திய குற்றப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

இதையடுத்து நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைத் தடை செய்யுமாறு யூடியூப் நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பினர். இந்நிலையில், கருப்பர் கூட்டம் சேனலில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர். சர்ச்சைக்குரிய வீடியோக்கள் இருந்ததால், அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.