முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ் கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை விமர்சித்த வழக்கில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 23-ந்தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் கருணாஸ் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்

இந்தநிலையில் ஜாமீன் கோரிய மனு மீது நீதிபதி ரோஸ்லின் துரை நேற்று தீர்ப்பு கூறினார். கருணாசுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, 30 நாட்களுக்கு தினமும் காலை 8.30 மணிக்கு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

மேலும் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் கருணாஸ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, இந்த வழக்கிலும் கருணாசுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கிற்காக கருணாஸ் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் 30 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.இரு வழக்குகளிலும், கருணாசுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து, இன்று காலை வேலூர் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். 

விடுதலை செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், என் மீதான வழக்கில்  உண்மை வென்றது, நீதி வென்றது என்றும் , இன்னும் ஆயிரம் வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வேன் என்றும் சவால் விடுத்தார்.