தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட, திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் ஜாமின் மனு மீதான விசாரணை, சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ், கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், தமிழக முதல்வர் தன்னைக் கண்டு அஞ்சுவதாகவும், சட்டையைக் கழற்றிவிட்டு வந்து நேருக்கு நேர் என்னுடன் மோதத் தயாரா?' எனப்  போலீசையும் சாதி ரீதியாகவும், கூவத்தூரை அடையாளம் காட்டியது நான்தான் எனவும் பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைத் தெரிவித்தார் கருணாஸ். அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியது.  

இது தொடர்பாக, கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் போலீஸார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிறகு கருணாஸ், காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட கருணாஸ், புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

கருணாஸ் தரப்பில் ஜாமீன் கோரி கருணாஸ் தாக்கல் செய்த மனுவும், காவல் துறை சார்பில் கருணாஸை ஒருவாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மனுக்களும் இன்று சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று நடக்கிறது. நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த  வேலூர் மத்திய சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டார்.