மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் தினமும் மலர் அலங்காரம் செய்வதைப்போல ஜெயலலிதாவின் சமாதியில் மலர் அலங்காரம் செய்யும் பொறுப்பை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியிருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர்.  நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கான கட்டுமான பணிகள் சுமார் 60 கோடி ரூபாய் செலவில்  நடைபெற்றுவருகின்றன. ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாளில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் மக்கள் அதிகளவில் வருகிறார்கள். அண்ணா சமாதி அருகே உள்ள கருணாநிதி நினைவிடத்தில் விதவிதமாக நடக்கும் மலர் அலங்காரங்களைப் பார்க்கவே மக்கள் அதிகளவில் கூடுகிறார்கள். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்கூட வைப்பதில்லையே என்று கவலைப்பட்ட அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்ய வேண்டும் என்று கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

 
இந்நிலையில் கட்சித் தொண்டர்களின் கோரிக்கையை அறிந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தன்னுடைய சொந்த செலவில், மலர் அலங்காரம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து செய்ய அவருடைய இரண்டாவது மகன் ஜெயபிரதீபை நியமித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இனி கருணாநிதி சமாதியைப் போல ஜெயலலிதா சமாதியிலும் மலர் அலங்காரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.