கருணாநிதி மறைந்த கையோடு மனதளவில், உடலளவில் உடைந்துபோன சண்முகநாதன், உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அதைக் கேள்விப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அவரை நலம் விசாரித்து வந்தார்.
" அவர் என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் என்பதைவிட, என்னுடைய அகத்திலே இருந்து பணியாற்றுபவர்" என்றுதான் சொல்வேன் என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியே சொல்லுமளவிற்கு அவரின் நம்பிக்கைக்கு உரியவராக, நிழலாக ஒருவர் இருந்தார் என்றால் அது தற்போது மறைந்த சண்முகநாதன் ஆகத்தான் இருக்க முடியும்.
"கருணாநிதியின் நிழல்".... இதுதான் 50 ஆண்டுகாலம் சண்முகநாதனின் அடையாளம்.. கிட்டத் தட்ட தனது வாழ்வின் முக்கால் வாசி காலத்தை கருணாநிதியின் உதவியாளராகவே இருந்து கழித்தவர், அவரின் மனசாட்சி ஆகவே இருந்தவர்தான் சண்முகநாதன். படிப்பை முடித்த கையோடு இளம் வயதிலேயே தமிழ் சுருக்கெழுத்து நிருபராக தமிழக காவல்துறையில் பணியில் இருந்தவர் சண்முகநாதன். எதிர்க் கட்சித் தலைவர்களின் பொதுக்கூட்டத்திற்கு சென்று அவர்களின் பேச்சை சுருக்கெழுத்தில் குறிப்பு எடுத்து அதை அதிகாரிகளுக்கு தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும் என்பது அவரது பணி.
கருணாநிதியோ அரசியலில் நம்பிக்கையூட்டும் தலைவராக கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.. நிலைமை இப்படி இருக்க காவல் துறையில் சுருக்கெழுத்தில் குறிப்பெடுக்கும் பணியில் இருந்த சண்முகநாதன், எப்படி கருணாநிதியின் பாசறையில் சேர்ந்தார் என்பது தனிக் கதை, அதை ஒரு முறை சண்முகநாதன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட கருணாநிதியே சொல்லியிருக்கிறார். மேடையில் பேசிய அவர், சண்முகநாதனை எப்படி அழைத்து தன்னுடன் வைத்துக் கொண்டேன் என்ற ருசிகர தகவலை வெளியிட்டார். கருணாநிதி பேசியதாவது;- முன்பெல்லாம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பேராசிரியர், என்போன்றவர்கள் பேச்சுக்களை உடனுக்குடன் பதிவு செய்து, எழுதி மேலிடத்திற்கு அனுப்பும் பணியை காவல்துறையினர் துப்பறியும் பிரிவினர் மேற்கொள்வர். அப்படிப் பதிவு செய்த பேச்சுக்களை வைத்து வழக்கு போடுவார்கள். அப்படித்தான் ஒருமுறை என் பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கு போடும் அளவிற்கு நான் என்ன அப்படி பேசிவிட்டேன் என்பதை அறிய காவல் துறையிடமிருந்து எனது பேச்சு நகலை வாங்கி படித்து பார்த்தேன், அதில் நான் வியந்தும் போனேன், என்னுடைய பேச்சு, பேராசிரியர் அன்பழகன் பேச்சு மற்றும் திமுகவினரின் பேச்சுக்கள் எல்லாம் அப்படியே எழுத்து வடிவமாக பதிவாகி இருந்தது. அதில் ஒரு எழுத்துக் கூட கூடவே குறையாமல் அப்பட்டமாக இருந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீங்கள் இப்படி பேசினீர்களா என்று நீதிமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்டபோது நான் மனசாட்சிப்படி ஆமாம் என்று ஒப்புக் கொண்டேன். பிறகு எனக்குள் ஒரு யோசனை ஓடிக் கொண்டே இருந்தது, யார் இவ்வளவு தெளிவாக எங்கள் பேச்சை அச்சுஅசலாக படி எடுத்திருப்பார்கள் என்று விசாரித்தபோது சண்முகநாதன் பற்றி எனக்கு தெரியவந்தது.
1967 அண்ணாவின் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் நான் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது, சண்முகநாதன் நினைவுக்கு வந்தார். அந்த தம்பியை என்னுடன் வைத்துக் கொள்கிறேன் என்று என் அலுவலகத்தில் சேர்த்துக்கொண்டேன். சண்முகநாதனை பொருத்தவரை "என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் அல்ல என்னுடைய அகத்திலிருந்து பணியாற்றுபவர்" தன்னை முழுவதுமாக திராவிட இயக்கத்தில் ஒப்படைத்துhf கொள்ளும் அளவிற்கு எங்களில் ஒருவராக கலந்து விட்டவர் என்று உருக்கமாக கூறி இருந்தார்.
இதுதான் சண்முகநாதனுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் பந்தம் ஏற்பட்ட தருணம். கவிஞர், பேச்சாளர், அரசியல் தலைவர், பத்திரிக்கையாளர் என பன்முகம் கொண்ட கலைஞர் கருணாநிதியே வியந்து போகும் அளவிற்கு, தனது குறிப்பெடுக்கும் எழுத்தாற்றலால் 50 ஆண்டுகாலம் கருணாநிதியின் மனசாட்சியாக, இருந்தவர் அவர்.சண்முகநாதனுக்கும், கருணாநிதிக்கும் இடையேயான உறவு அவ்வளவு எளிதில் யாரும் புரிந்துகொள்ள முடியாதது. கருணாநிதியின் கண்ணசைவுக்கு என்ன அர்த்தம்... அவர் சந்திக்கலாம் என்றால் என்ன அர்த்தம்... எப்போது தூங்குவார், அப்போது கண் விழிப்பார் என்று கருணாநிதியை பற்றி அங்குலம் அங்குலமாக தெரிந்து வைத்திருந்த ஒரே நபர் சண்முகநாதன்.
கருணாநிதியில் மறைவுக்கு பின்னர் தான் அவருடன் சேர்ந்த்து குறித்து கூறிய சண்முகநாதன், கலைஞர் என்ற சூரியன் இல்லாததால், என் வானம் வெறுமையாகி விட்டது என்ற கவலையுடன், 1969ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி கலைஞர் கருணாநிதி அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது எனது தங்கையின் திருமண நிகழ்ச்சிக்காக ஒரு மாத காலம் சொந்த கிராமத்திற்கு விடுமுறையில் சென்றிருந்தேன். கலைஞரின் உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகத்தில் இருந்து எனக்கு தந்தி மூலம் தகவல் தெரிவித்தனர். உடனே விடுமுறையை ரத்து செய்துவிட்டு அதே பிப்ரவரி மாதம் கருணாநிதியின் உதவியாளராக சேர்ந்துவிட்டேன். யாருக்கும் கிடைக்காத அறிய வாய்ப்பு இந்த எளியவனுக்கு கிடைத்தது என புலங்காகிதம் அடைந்தார். 48 ஆண்டுகள் அவர் உதவியாளராக பணியாற்றினேன், கலைஞர் கருணாநிதிக்கு48 ஆண்டுகளாக நான் ஊழியம் செய்தேன் என்பதை விட அவரின் சீடராகவே இருந்தேன் என கூறினார் சண்முகநாதன். உலகில் எவரையும் விட அதிகமாக பக்கம் பக்கமாக எழுதி உச்சத்தைத் தொட்ட தலைவர் கருணாநிதி என சண்முகநாதன் அவரின் மறைவின் போது புகழ்ந்தார்.

வெறும் பத்து நிமிடத்தில் பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பாடலை செம்மொழி மாநாட்டிற்கு எழுதினார், கலைஞர் கருணாநிதி மேடைகளில் என் உயிரின் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று சொல்லும்போது உணர்ச்சிபொங்க, மெய் மறந்து கைதட்டி ஆரவாரம் செய்யும் தொண்டர்கள், நிகழ்வுகள் என எத்தனையோ நான் பார்த்திருக்கிறேன், கலைஞரின் காந்த குரலும், கைதட்டலும், ஆரவாரமும் எனது செவிகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. என கருணாநிதியின் நினைவுகளுடன் தனது இறுதிக் கட்டத்தை வாழ்ந்து கொண்டிருந்த சண்முகநாதன். கடந்த 48 ஆண்டுகளில் இரண்டு முறை கருணாநிதியுடன் கோபித்துக்கொண்டு சென்றதையும் கூறினார். ஆனால் என்னை ஓரிரு நாட்களில் கோபாலபுரத்திற்கு வரவைத்துவிட்டார் கருணாநி, அந்த அளவிற்கு அவரின் பிரியத்திற்கு உரியவனாக இருந்தேன் என்றார்.
சண்முகநாதனின் தந்தை மறைந்தபோது இடுகாடு வரை நடந்தே சென்று, அஞ்சலி செலுத்தி தனது உதவியாளரை அவரது ஊரார் உறவினர்கள் முன்னிலையில் பெருமைப்படுத்தியவர் கருணாநிதி. மு.க ஸ்டாலின், மு.க அழகிரி, செல்வி என எல்லோரும் சண்முகநாதன் பார்த்து வளர்ந்தவர்கள் தான். கருணாநிதி மறைந்த கையோடு மனதளவில், உடலளவில் உடைந்துபோன சண்முகநாதன், உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அதைக் கேள்விப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அவரை நலம் விசாரித்து வந்தார். அப்போது, முத்தமிழறிஞர் கலைஞரின் எண்ணங்களை உள்வாங்கி, அவரது கண் அசைவுக்கு ஏற்ப காரியம் ஆற்றியவர். கலைஞருடைய அரசியல் வாழ்வின் ஆவணம், சண்முகநாதன் மாமா அவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன் என பதிவிட்டு இருந்தார் உதய்.

கடந்த 50 ஆண்டுகளாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக இருந்த சண்முகநாதன், கோபாலபுரம் இல்லம், முரசொலி அலுவலகம், அரசியல் மேடைகள் என கருணாநிதி செல்லுமிடமெல்லாம் நிழலாக நீக்கமற நின்றவர். "கருணாநிதியின் பிரிவு என்னை வாட்டுகிறது" என கூறிவந்த சண்முகநாதன்,"சூரியன் இல்லாத வானமாகி விட்டது என் வாழ்க்கை" என்று புலம்பி வந்த சண்முகநாதன், இதோ அந்த சூரியனை தேடி திரும்ப முடியாத இடத்திற்கு சென்றிருக்கிறார். அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
