திமுக தலைவர் கருணாநிதி, கட்சி நிர்வாகி ஒருவரின் குழந்தையுடன் கைகுலுக்கி அறிமுகப்படுத்திக் கொள்ளும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

வயது முதிர்வு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை, கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினர் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். அவருடன் புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் பகிரப்பட்டு வருகிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவின் மண்டல மாநாடு ஈரோடு மாவாட்டத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கருணாநிதி கலந்து கொள்வரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை. 

சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருக்கும் கருணாநிதி, கட்சி நிர்வாகிகள் குடும்பத்தினருடன் புன்முறுவலுடன் புகைப்படம் மட்டுமே எடுத்து வந்த நிலையில், இந்தமுறை குழந்தைகளுடன் உரையாடினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கருணாநிதி தனது பேரக் குழந்தைகளோடு விளையாடும் காட்சி இணையதளங்களில் வைரலாக பரவியது.இந்த நிலையில், சிறுமி ஒருவரிடம் கருணாநிதி உரையாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. 

அந்த வீடியோவில், சிறுமியிடம் நான் யார்? என்று கருணாநிதி சைகையில் கேட்கிறார். அதற்கு அந்த சிறுமி, கலைஞர் கருணாநிதி என்று பதில் சொல்கிறார். பின்னர் சிறுமியைப் பார்த்து கை நீட்டுகிறார். சிறுமியும் கைகுலுக்கி வாழ்த்துப் பெறுகிறார்.