கலைஞருக்கு முதன் முதலாக மதுரையில் சிலை வைத்து தி.மு.க தொண்டர்களின் அனுதாபத்தை பெறும் முயற்சியில் மு.க.அழகிரி இறங்கியுள்ளார். கலைஞர் மறைவுக்கு பிறகு எப்படியாவது மீண்டும் தி.மு.கவில் இணைந்து இழந்த அதிகாரத்தை பெற வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். மு.க.அழகிரி. இதற்காக ஸ்டாலினை மிரட்டிப்பார்த்தார், கெஞ்சிப் பார்த்தார் எதுவும் நடக்கவில்லை. இதனை தொடர்ந்து தனது பலத்தை காட்ட சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினார் அழகிரி. 

ஒரு லட்சம் பேர் வருவார்கள் என்று அழகிரி கூறிய நிலையில் வெறும் 20 ஆயிரம் மட்டுமே பேரணியில் பங்கு பெற்றனர். அவர்களில் பாதி பேர் கூட இறுதி வரை பேரணியில் வரவில்லை. பேரணியும் தோல்வியில் முடிந்த காரணத்தினால் கடந்த நான்கு நாட்களாக அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியுள்ளது. சென்னையில் தனது பலத்தை காட்ட முயன்று தோல்வி அடைந்ததை மனதளவில் அழகிரி ஒப்புக் கொண்டார். இதனால் தனது பலத்தை தான் இருக்கும் மதுரையில் காட்ட தற்போது அழகிரி முடிவு செய்துள்ளார். இதற்காக என்ன செய்வது என்று யோசித்தவருக்கு சென்டிமென்டாக ஒரு யோசனை வந்துள்ளது. அதாவது தனது பலத்தையும் காட்டியதாகவும் இருக்க வேண்டும் கலைஞர் ஆதரவாளர்களை ஈர்க்கும் வகையிலும் அந்தநடவடிக்கை இருக்க வேண்டும். 

இதற்கு அழகிரி தேர்வு செய்தது தான் கலைஞர் சிலை. கலைஞர் மறைவை தொடர்ந்து வேலூர் அருகே கலைஞருக்கு தி.மு.கவினர் சிலை வைத்தனர். ஆனால் உரிய அனுமதியின்றி வைத்ததாக கூறி அந்த சிலையை போலீசார் அகற்றினர். இதனால் தமிழகத்தில் தற்போது வரை கலைஞருக்கு எங்கும் சிலை வைக்கப்படவில்லை. இந்த குறையை போக்கும் வகையிலும் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கலைஞருக்கு சிலை வைப்பதற்கு முன்னதாக பொது இடத்தில் தான் வைத்துவிட வேண்டும் என்றும் தீவிரம் காட்டி வருகிறார் அழகிரி.

சிலை திறப்பு அன்று மதுரையில் தனது பலத்தை காட்டும் வகையிலும் ஏற்பாடுகளையும் அழகிரி முடுக்கிவிட்டுள்ளார். முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி ஆணையருக்கு அழகிரி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவருமான கலைஞருக்கு மதுரையில் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை மாநகராட்சி அனுமதி அளிக்கும் பட்சத்தில் பால்பண்ணை சந்திப்பில் கலைஞருக்கு முழு உருவ வெண்கலச் சிலை வைக்க உள்ளதாகவும் அந்த கடிதத்தில் அழகிரி கூறியுள்ளார். 

இதன் மூலம் கலைஞரின் மகன் என்பதையும், கலைஞருக்கு சிலை வைத்து அவரது புகழை நிலை நிறுத்துவது தான் தான் என்றும் தி.மு.க தொண்டர்களிடம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளலாம் என்று அழகிரி கணக்கு போட்டுள்ளார். மேலும் தி.மு.க தலைவரான பிறகு ஸ்டாலின் கலைஞரை மறந்துவிட்டார் என்றும் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்க அழகிரி இந்த சிலை திட்டத்தை பயன்படுத்த உள்ளார். எது எப்படியோ கலைஞருக்கு சிலை வைத்து இந்த விவகாரத்தில் ஸ்டாலினை அழகிரி ஓவர்டேக் செய்யப்போகிறார் என்பது மட்டும் உறுதி. ஏனென்றால் மதுரையில் கலைஞருக்கு சிலை வைக்க நிச்சயம் மாநகராட்சி அனுமதி அளிக்கும் என்றும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு அழகிரிக்கு ஆதரவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.