Asianet News Tamil

கலைஞர் சமாதிக்குச் சென்ற பிறகே ஜெ.அன்பழகன் சிகிச்சைக்குச் சென்றார்... கண்களில் நீர்வழிய பேசிய ஸ்டாலின்..!

திமுகவைப் பொறுத்தவரையில் ஒரு தொண்டன், நூறு பேருக்குச் சமம். திமுகவின் ஒரு மாவட்டச் செயலாளர் என்றால் ஆயிரம் பேருக்குச் சமம் என்கிற அளவுக்கு யானை பலத்துடன், அதிக பலத்துடன் வலம் வந்த வேங்கைதான் நம்முடைய ஜெ.அன்பழகன் என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

Karunanidhi Samadhi j anbazhagan went to treatment..DMK president Stalin
Author
Tamil Nadu, First Published Jul 4, 2020, 7:41 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

திமுகவைப் பொறுத்தவரையில் ஒரு தொண்டன், நூறு பேருக்குச் சமம். திமுகவின் ஒரு மாவட்டச் செயலாளர் என்றால் ஆயிரம் பேருக்குச் சமம் என்கிற அளவுக்கு யானை பலத்துடன், அதிக பலத்துடன் வலம் வந்த வேங்கைதான் நம்முடைய ஜெ.அன்பழகன் என மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

ஜெ.அன்பழகன் படத்திறப்பு நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலின், கண்களில் நீர்வழிய குரல் உடைந்து உருக்கமுடன் பேசினார். அதில், சகோதரன் ஜெ.அன்பழகன் நம்மையெல்லாம் ஏமாற்றிவிட்டு போய்விட்டார். இது சென்னை மேற்கு மாவட்டத்திற்கும் மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல. ஒட்டுமொத்த சென்னைக்கும் ஏற்பட்ட இழப்பாகவும் பார்க்கவில்லை. திமுகவிற்கே ஏற்பட்டு இருக்கக்கூடிய இழப்பு. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்குகே ஏற்பட்டு இருக்கக்கூடிய இழப்பாகும். 

முக்கியமாக தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய இழப்பு. பண்முக ஆற்றல் கொண்டவராக சகோதரன் ஜெ.அன்பழகன் இருந்தார். கழக பணிகள், மக்கள் பணிகள், பொதுநல சேவைகள் இதில் எப்பொழுதும் அவர் மூழ்கியே இருப்பார். ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் எதை நடத்துவது என்றாலும் அதில் ஒரு பிரமாண்டத்தை காட்டுவார். அந்த பிரமாண்டங்களை பொறுத்த வரையில் அழகாகவும் இருக்கும், வியப்பாகவும் இருக்கும். எல்லோரும் சொன்னார்கள். சட்டமன்றத்தில் அவருடைய பணியை பற்றி. சட்டமன்றத்தில் எழுந்து நின்றாலே சிங்கம் போல கர்ஜிப்பார். தொலைக்காட்சியில் சில நேரங்களில் அவருடைய விவாதங்கள் நடைபெறும். எல்லாரையும் தனது வாதத்தால் அடித்து நொறுக்கிவிடுவார். அந்த அளவிற்கு ஆற்றலை பெற்றவர். திரைப்படங்களை தயாரித்துள்ளார். விளையாட்டிலும் மிகவும் ஆர்வமாக இருப்பார். பல நேரங்களில் என்னிடம் கிரிக்கெட்டை பற்றி விவாதித்துள்ளார். 

ஒரு மாவட்ட செயலாளர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக நடந்தவர் மட்டுமல்ல, ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாகவும் நடந்தவர் மட்டுமல்ல, ஒரு சகோதரன் எப்படி பட்டவனாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இருந்தர் நம்முடைய அன்பழகன் அவர்கள். மனதில் பட்டதை பட்டுபட்டு என்று பேசக்கூடியவர். எதை பற்றியும் கவலைப்படமாட்டார். சரி என்றால், உடனே பாராட்டுவார். தவறு என்றால் உடனே அதை தயங்காமல் சுட்டிகாட்டுவார். அது கழக பொதுக்குழுவாக இருந்தாலும், செயற்குழுவாக இருந்தாலும், மாவட்ட செயலாளர் கூட்டமாக இருந்தாலும் சரி.

ஒவ்வொரு நாளும் கழகம் தன்னால் வளர வேண்டும் என்று நினைத்து செயல்பட்டவர் ஜெ.அன்பழகன். அவருடைய உடல் எப்படி என்பது அனைவருக்கும் தெரியும். 1996ம் ஆண்டு லண்டன் சென்று ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தார். விமானம் நிலையம் சென்று அவரை நான் வரவேற்றேன். நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. தலைவரை போய் பார்க்க வேண்டும் என்றார். நானும் சொன்னேன் தலைவர் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். கோபாலபுரம் சென்ற போது லண்டன் சென்று தனது சொந்த மகன் சிகிச்சை பெற்று வந்ததைபோல தலைவர் கலைஞர் அவர்கள் கட்டிபிடித்துக்கொண்டு மகிழ்ந்தார். 

ஆனால், இன்றைக்கு தலைவர் கலைஞரும் இல்லை, ஜெ.அன்பழகனும் இல்லை. இருவருமே நம்மைவிட்டு அடுத்தடுத்து மறைந்துவிட்டார்கள். தலைவர் அவர்களை மேடையில் வைத்துக்கொண்டே நம்முடை அன்பழகன் அவர்கள் பலமுறை பேசியுள்ளார். தலைவர்கள் அவர்களே நான் போனஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய உடல்நிலைப்பற்றி அனைவருக்கும் தெரியும். எனது வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடியலாம். அப்படி முடியர நேரத்துல என்னுடைய உடல் மீது உங்களுடைய கண்ணீர் விழ வேண்டும் என்று பேசினார். 

அந்த உணர்ச்சிகரமான உரையை கேட்ட அனைவரும் கைதட்டினர். அடுத்து பேசிய நம்முடைய கலைஞர் என்ன பேசினார் தெரியுமா? நீங்கள் அனைவரும் கை தட்டினர்கள். ஆனால், ஜெ.அன்பழகனின் பேச்சை கேட்டு என்னுடைய மனசு எவ்வளவு கவலைப்பட்டிருக்கும் என்று நினைத்து பார்த்தீர்களா? அப்படி கூறினார். ஆகவே, ஜெ.அன்பழகனின் பேச்சு கேட்டு கலங்கியவர் தான் கலைஞர். அப்படிப்பட்ட கலங்கிய இதயத்தோடுதான் நான் உங்கள் இருக்கிறேன். அன்பழகனின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று புரிய தெரியல. 

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யாமல் அனாதைகள் போல் கைவிட்டுவிட்டது. ஆகையால், திமுக கழகம் ஒற்றிணைவோம் வா என்ற திட்டத்தை கையில் எடுத்தது.  அதன் மூலமாக நாம் பல உதவியை செய்துள்ளோம். இந்த களப்பணியில் முன்னின்று கடமையாற்றிய செயல் வீரர்தான் நம்முடைய ஜெ.அன்பழகன். அவரது உடல்நிலை அனைவரும் பேசினார்கள். நானும் பலமுறை சொன்னேன். நீங்கள் ரொம்ப அலையக்கூடியது. வீட்டில் இருந்தே உங்கள் பணியை கவனியுங்கள். தினமும் காலையும் மாலையும் நான் தொலைபேசியில் பேசுவேன். இல்லாவிட்டால் அவர் பேசுவார். இன்றைய தினம் என்னென்ன பணிகளைப் பார்த்தோம், எங்கெங்கு உதவிகள் செய்தோம் என்று சொல்வார். அப்போதும், “அதிகமாக அலையாதே அன்பு” என்றுதான் நான் சொல்வேன். அவர் எனக்கு அறிவுரை சொல்வார். ''நீங்க வெளியே போகவேண்டாம் தலைவரே, எல்லாப் பணிகளையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்று எனக்குச் சொல்வார்.

கொரோனாவில் இருந்து மக்களைக் காக்கப் போராடியவர், கொரோனாவுக்கே பலியாக வேண்டியதாகிவிட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தாளமுத்துவையும் நடராசனையும் இழந்தோம். இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் விருகம்பாக்கம் அரங்கநாதனை இழந்தோம் என்பதைப் போல கொரோனா எதிர்ப்புப் போரில் ஜெ.அன்பழகனை இழந்தோம் என்று சொல்லும் அளவுக்கு வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். அதனால்தான் அவர் இறந்தபோது நான் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டுக்காகப் போராடி உயிரிழந்த ராணுவ வீரரின் தியாகத்துக்கு இணையானது கொரோனா தடுப்புப் பணிக்காகப் போராடி உயிரிழந்த என் சகோதரர் அன்பழகனின் தியாகமும்’ என்று நான் குறிப்பிட்டேன்.

திமுகவைப் பொறுத்தவரையில் ஒரு தொண்டன், நூறு பேருக்குச் சமம். திமுகவின் ஒரு மாவட்டச் செயலாளர் என்றால் ஆயிரம் பேருக்குச் சமம் என்கிற அளவுக்கு யானை பலத்துடன், அதிக பலத்துடன் வலம் வந்த வேங்கைதான் நம்முடைய ஜெ.அன்பழகன். உடல்நலமில்லை என்றதும் நேராகத் தலைவர் கலைஞர் துயில்கொள்ளும் கடற்கரைக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் மருத்துவமனைக்கே சென்றார் என்பதை விடக் கட்சியின் மீதும், கலைஞர் மீதும் அவர் வைத்திருந்த அன்புக்கு வேறு ஆதாரம் சொல்ல வேண்டியதில்லை. மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டது முதல், நான் நிலைகொள்ளாமல் இருந்தேன். மருத்துவர்களுடன் பேசிக் கொண்டே இருந்தேன். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தோம். ஆனாலும் அவரால் மீள முடியவில்லை.

நம்மை மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார். மாவட்டக் கட்சியை அவர் எத்தகைய கம்பீரத்துடன் நடத்தினாரோ அதேபோல் நடத்தப்பட வேண்டும். ஜெ.அன்பழகனோடு தோளோடு நின்ற தோழர்கள் அனைவருமே ஜெ.அன்பழகனைப் போலவே உற்சாகமாக, கம்பீரமாக, தொய்வில்லாமல் பணியாற்ற வேண்டும்.கட்சிக் கோட்டையாக இருக்கும் தலைநகர் சென்னையைக் காக்கும் பெரும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஜெ.அன்பழகன் நம்மோடு இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தோடு நீங்கள் அனைவரும் செயல்பட வேண்டும்.

ஜெ.அன்பழகன் குடும்பத்தினர் அனைவருக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. கோடிக்கணக்கான திமுக குடும்பத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களது துன்ப துயரங்களில் நாங்களும் பங்கெடுக்கிறோம். என்றென்றும் துணை நிற்போம். மறைந்த ஜெ.அன்பழகன் உங்கள் குடும்பத் தலைவர் மட்டுமல்ல எங்கள் அனைவர் குடும்பத்திலும் ஒருவர். ஜெ. அன்பழகனின் சிரித்த முகத்தை யாரும் மறக்க முடியாது. அவர் சிந்திய வியர்வையும் ரத்தமும் வீண்போகாது. ஜெ.அன்பழகனின் புகழ், மங்காது; மறையாது. வாழ்க என் சகோதரர் ஜெ.அன்பழகனின் புகழ் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios