இறுதி மூச்சுவரை தமிழையே சுவாசித்து தமிழுக்காவே பல தொண்டுகள் ஆற்றிய, கலைஞரின் இழப்பை பதிவு செய்திடுகையில் செய்திடும் விரல்களும் கூட சில நொடி தடுமாறுகிறது. வார்த்தைகளை திரையில் உமிழ்ந்த பிறகும் கூட  வேதனை நெஞ்சிலே பதிந்து அழுத்துகிறது. இந்த நிலைமையை கூட வார்த்தைகளில் வெளிப்படுத்திட கலைஞரின் வரிகளே கை கொடுக்கிறது. கண்கள் பனிக்கிறது! இதயம் கனக்கிறது!

அரசியலில் இரண்டு நூற்றாண்டுகளாக மக்களுக்காக தொண்டாற்றிய திமுக தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று இயற்கை எய்தினார். அவரது இழப்பால் ஒரு பக்கம் துடி துடித்துக்கொண்டிருக்கிறது தமிழகமே.
பிறக்கும் போதும் போராட்டம், வாழும் போதும் போராட்டம், இறந்த பிறகும் கூட போராட்டம். போராட்டத்தின் பெயர் தான் கலைஞரோ? என எண்ணும்படி செய்திருக்கின்றன சமீபத்திய நிகழ்வுகள். ஐந்து முறை தமிழகத்தை முதல்வராக ஆட்சி செய்தவருக்கு, கடைசியில் அவர் ஆசைப்பட்டபடி அவரின் உயிருக்கு நிகரான அறிஞர் அண்ணாவின் அருகே நல்லடக்கம் செய்யப்படுவதற்கு கூட இத்தனை தடைகளா? எனும் படி இருக்கிறது இப்போதைய நிலை.

வாழும் போது மக்களுக்காக அரசியலில் பல போராட்டம் செய்தவரை, இறந்த பிறகு கூட தன்னுடைய நல்லடக்கத்திற்கான இடத்திற்க்காக போராட வைத்திருக்கிறது சூழல். 

கலைஞரை நல்லடக்கம் செய்ய, அண்ணா சமாதியின் அருகே மெரினாவில் இடம் வேண்டும். என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் திமுக அரசியல் தலைவர்கள், மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் ஆகியோர் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதற்கு சட்ட ரீதியாக தான் எந்த முடிவையும் எடுக்க முடியும் எனக்கூறி, அங்கு இடம் ஒதுக்க முடியாது என மறுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனை தொடர்ந்து கிண்டியில் காமராஜர் நினைவிடம் அருகே கலைஞருக்காக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால் கலைஞரை அண்ணாவின் அருகே சேர்த்துவிட திமுகவினர் கடுமையாக போராடி வருகின்றனர்.இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக அவர்கள் அளித்திருக்கும் மனுவின் பெயரில், இன்று இரவு 10.30 மணியளவில் தற்காலிக தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.