சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு வந்த அவரது துணைவியார் ராசாத்தி அம்மாள் நாற்காலிபோட்டு அமர்ந்த காரணத்தினால் திடீர் பரபரப்பு உருவானது. கலைஞர் மறைந்து 16வது நாள் என்பதால் நேற்று கோபாலபுரம் வீட்டில் காரியம் செய்யப்பட்டது. இதில் மு.க. ஸ்டாலின், மு.க.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். திருவாரூரில் இருந்தும் கலைஞர் உறவினர்கள் கோபாலபுரத்தில் வந்திருந்தனர். காரியம் முடிந்த பிறகு அங்கு சாப்பிட்ட மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் அங்கிருந்து நடந்தே கலைஞரின் மகள் செல்வி வீட்டிற்கு சென்றனர். 

செல்வி வீட்டிலும் கலைஞர் மறைந்த 16வது நாளை முன்னிட்டு காரியம் செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் அங்கு சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் அழகிரி குடும்பத்தினர் கோபாலபுரத்தில் காரியம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டனர். இதே போல் கனிமொழியின் சி.ஐ.டி காலனி இல்லத்திலும் கலைஞருக்கு 16ம் நாள் காரியம் செய்யப்பட்டது.  இந்த நிலையில் தான் மாலையில் திடீரென ராசாத்தி அம்மாள் கலைஞர் நினைவிடத்திற்கு வருகை தந்தார். முதலில் அவர் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்ததான் வந்ததாக கருதப்பட்டது. ஆனால் அஞ்சலி செய்து முடித்த ராசாத்தி அம்மாள் அங்கிருந்து புறப்படாமல் நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்தார். இதனால் அந்த இடம் சிறிது பரபரப்பானது. கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த பலரும் ராசாத்தி அம்மாளை பார்த்து அங்கேயே நிற்க ஆரம்பித்தனர்.

இதனால் கூட்டம் சேர்ந்து கலைஞர் நினைவிடம் இருக்கும் இடம் பரபரப்பானது. அப்போது தான் திடீரென ஒரு நாற்காலி எடுத்துவரப்பட்டது. அந்த நாற்கலியை கலைஞர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே போட்டு ராசாத்தி அம்மாள் அமர்ந்துவிட்டார். இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் முதல் தி.மு.க தொண்டர்கள் வரை பலரும் குழப்பம் அடைந்தனர். மேலும் எப்போதும் கலைஞர் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும் ராசாத்தி அம்மாள் ஏன் அங்கேயே அமர வேண்டும் என்று கேள்வி எழுந்தது.  உடனடியாக பல்வேறு தொலைக்காட்சிகள் தங்களது லைவ் பேக்கை ஆன் செய்து தயாரானார்கள். 

போலீசாரும் ராசாத்தி அம்மாளிடம் சென்று ஏதோ பேசினர். அதற்கு அவர் பதில் அளித்துவிட்டு மவுனமாக அமர்ந்திருந்தார். நேரம் செல்ல செல்ல பதற்றம் அதிகரித்த நிலையில், ஒரு சில தி.மு.க தொண்டர்கள் எதுவும் பிரச்சனையா என்று ராசாத்தி அம்மாளிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அப்போது தான் நிலைமையை உணர்ந்த ராசாத்தி அம்மாள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் விசாரித்த போது தான், 16ம் நாள் காரியம் செய்த காரணத்தினால் காலையில் இருந்தே ராசாத்தி அம்மாள் அப்செட்டாக இருந்துள்ளார். இதனால் கலைஞர் நினைவிடத்தில் அமர்ந்திருந்தால் மன நிம்மதி கிடைக்கும் என்று அங்கு நாற்காலிபோட்டு அவர் அமர்ந்திருந்ததாக அவருடன் வந்திருந்த உறவினர்கள் தெரிவித்தனர்.